| ADDED : ஆக 05, 2024 10:20 PM
மேட்டூர்:பள்ளிகளுக்கு கெட்டுப்போன முட்டை 'சப்ளை' செய்யப்பட்டதால், மாணவர்களுக்கு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது.சேலம் மாவட்டம், கொளத்துார் ஒன்றியத்தில், 84 பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளி, நிதி உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., வரை படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில் தினமும் மதிய உணவுடன் இலவச முட்டை வழங்கப்படுகிறது.ஒப்பந்ததாரர்கள், வாரத்தில் இரு நாட்கள் பள்ளிகளுக்கு சப்ளை செய்வது வழக்கம். கொளத்துார் ஒன்றியம், காவேரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 147 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.அவர்களுக்கு வழங்குவதற்காக, நேற்று காலை ஒப்பந்த நிறுவனம் சார்பில் முட்டை சப்ளை செய்யப்பட்டது. அந்த முட்டைகளின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் ஆசிரியர்கள், அவற்றை தண்ணீரில் போட்டு சோதனை செய்தனர். இதில், நல்ல முட்டைகள் நீரில் மூழ்கிய நிலையில், கெட்டுப்போன, 49 முட்டைகள் மட்டும் நீரில் மிதந்தன.அந்த முட்டைகளை வேக வைத்த நிலையில் மஞ்சள் நிறமாக மாறின. இதனால் மாணவர்களுக்கு நேற்று மதியம் முட்டை வழங்கப்படவில்லை. அதுபோல கொளத்துார் ஒன்றியத்தில், பெரும்பாலான பள்ளிகளுக்கு கெட்டுப்போன முட்டை சப்ளை செய்திருப்பது தெரியவந்தது.இதுகுறித்து, கொளத்துார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அண்ணாத்துரை கூறியதாவது:முட்டைகள் கெட்டுப்போனது குறித்து எனக்கு தகவல் வந்தது. கொளத்துார் ஒன்றியத்தில் அனைத்து பள்ளி ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து, தரமான முட்டைகளை பெற்று மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தினோம்.முட்டைகள் சப்ளை செய்யும் ஒப்பந்ததாரரிடம் பேசினேன். அவர்கள் கெட்டுப்போன முட்டைகளை திரும்ப பெற்று கொண்டு, வேறு வழங்குவதாக கூறியுள்ளனர்.இவ்வாறு கூறினார்.