| ADDED : ஜூலை 25, 2024 01:12 AM
சேலம்: மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்கு ஒதுக்கிய நிதி குறித்து, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டில்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் விளக்கம் அளித்தார். இதை, சேலம் ரயில்வே கோட்டத்தில் காணும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா கூறியதாவது: சேலம் ரயில்வே கோட்டத்தில், 15 ஸ்டேஷன்களில், 'அம்ரித் பாரத் மேம்பாட்டு' திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்பணி, 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும், 4 மாதங்களில் முழுமையாக பணி முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் திட்டத்தில், 45 கோடி ரூபாயில் பணிகள் நடக்கின்றன. 2வது நுழைவாயில் அமைக்க, 15 கோடி ரூபாய் செலவில் பணி நடக்கிறது. பெரிய நடை மேம்பாலம் கட்டப்படுகிறது.மொரப்பூர், தர்மபுரி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, இருகூர், போத்தனுார் தடங்களில் புது ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சேலம்- - கரூர் இரு வழி பாதை சர்வே பணியை முடித்துவிட்டோம். சேலம் வழி ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, முன்பதிவு இல்லா ரயில் பெட்டிகளை கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.