சேலம்: சேலம் மாவட்டத்தில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள், மாவட்ட அரசிதழில் பிரசுரிக்கப்படும் நீர்நிலைகளில் கட்டணமின்றி வண்டல் மண் எடுத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:மாவட்டத்தில் முதல்கட்டமாக, 42 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க, அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காடையாம்பட்டி வட்டத்தில், 1, சேலம், சேலம் மேற்கு, ஆத்துாரில் தலா, 3, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், இடைப்பாடி தலா, 4, மேட்டூர், 5, தலைவாசல், 6, ஓமலுார் வட்டத்தில், 9, என, மாவட்டத்தில், 42 நீர் நிலைகளில் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள், அவரவர் வசிக்கும் வட்டத்துக்கு உட்பட்டு அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ள நீர்நிலைகளில் வண்டல் மண் அள்ள, சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் அனுமதி பெற்று சொந்த செலவில் எடுத்துச்செல்லலாம். வண்டல் மண், களிமண் வெட்டி எடுத்து விளை நிலங்களை வளம்பெற செய்வதோடு மண்பாண்ட தொழிலை மேம்படுத்தி கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.விவசாய பயன்பாடுக்கு மண் எடுக்க, நிலம் தொடர்பான விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு தொடர்புடைய தாசில்தார், 30 நாட்களுக்குள் அரசு நிபந்தனைப்படி அனுமதி வழங்குவார். இவ்வாறு அவர் பேசினார்.