உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 6 பேர் கொலையான வீடு தீப்பிடித்த சம்பவம் : மூன்று பேர் கால்தடம் பதிவு செய்த போலீஸார்

6 பேர் கொலையான வீடு தீப்பிடித்த சம்பவம் : மூன்று பேர் கால்தடம் பதிவு செய்த போலீஸார்

பனமரத்துப்பட்டி: சேலம், தாசநாயக்கன்பட்டியில் ஆறு பேர் கொலை செய்யப்பட்ட வீட்டின் அறை தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில், மூன்று பேரின் கால்தடம் மற்றும் கால்ரேகையை, தடய அறிவியல் துறை போலீஸார் பதிவு செய்து, சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். சேலம், தாசநாயக்கன்பட்டி, சவுடாம்பிகா நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ், அவரது குடும்பத்தை சேர்ந்த சந்திரா, சந்தானலட்சுமி, ரத்தினம், விக்னேஸ்வரி, கவுதம் ஆகிய, 6 பேர், 2010 ஆகஸ்ட் 12ம் தேதி, வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சொத்து பிரச்னை காரணமாக, தன் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை வெட்டிக் கொன்றதாக, குப்புராஜ் மகன் சிவகுரு, நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆறு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீஸார், தி.மு.க.,வை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட, 9 பேரை கைது செய்தனர்.

சி.பி.சி.ஐ.டி., போலீஸார், கொலை நடந்த குப்புராஜ் வீட்டை பூட்டி, 'சீல்' வைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று, முன்தினம் மாலை, 4 மணியளவில், போலீஸாரின் கண்காணிப்பில் இருந்த குப்புராஜ் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், குப்புராஜ், சந்தானலட்சுமி, கவுதம் ஆகிய மூவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்த, படுக்கை அறை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. தகவலறிந்த, சேலம் எஸ்.பி., மயில்வாகனன், ரூரல் டி.எஸ்.பி., வைத்தியலிங்கம் ஆகியோர், தீ விபத்து ஏற்பட்ட அறையை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் துறை போலீஸார், தீ பிடித்து எரிந்த அறை, வராண்டா, மொட்டைமாடி, படுக்கை அறை பின்புறம் உள்ள ஜன்னல் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது, பெட்ரோலை விட வேகமாக தீப்பற்றி, எரியக்கூடிய, 'தின்னர்' என்ற திராவகத்தை பயன்படுத்தி தீ வைக்கப்பட்டதாக தெரியவந்தது. அதற்கான தடயத்தை, தடய அறிவியல்துறை போலீஸார் சேகரித்துள்ளனர்.கொலை நடந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால், கதவு அருகே உள்ள ரீப்பர் தடுப்பை விலக்கி, அதன் வழியாக சென்று படுக்கை அறைக்கு தீ வைத்திருக்காலம் என, போலீஸார் சந்தேகம் அடைந்தனர். அதனால், வீட்டு வராண்டாவில் பதிவாகி இருந்த கால் தடத்தை, தடய அறிவியல் துறை போலீஸார் பதிவு செய்துள்ளனர். அதில், மூவரின் கால்ரேகை மற்றும் கால் தடம் இருப்பதாக, தடய அறிவியல் போலீஸார் தெரிவித்தனர்.அதை சோதனை செய்வதற்காக போலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர். ஆறு பேர் கொலை வழக்கில், இந்த கால்தடங்கள் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என, போலீஸார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி