| ADDED : மே 24, 2024 07:09 AM
சேலம்: தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:தென்மேற்கு பருவமழை வரும் ஜூனில் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு, விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளவே, அலுவலர்களுடன் இந்த ஆலோசனை. தற்போது தொடர் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.சேலம், மேட்டூர், ஆத்துார், இடைப்பாடி, சங்ககிரி, வாழப்பாடி வட்டாரங்களில் கண்டறியப்பட்டுள்ள, 23 பகுதிகளுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் அதிக மழைப்பொழிவு ஏற்படும்போது மக்களை உடனே நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறையினர், அவசர தேவைக்கு போதிய அளவில் மணல் மூட்டைகளை தயார்படுத்தி முக்கிய இடங்களில் வைக்க வேண்டும். மரங்கள், சாலைகளில் சாய்ந்தாலோ, சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டாலோ, சம்பந்தப்பட்ட துறையினர் சரிசெய்ய வேண்டும். மருத்துவ துறையினர், நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். பேரிடர் தொடர்பான தகவல்களை, கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும், 1077 எனும் கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம். மேலும் உதவி கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களில் உரிய பணியாளர்களுடன், 24 மணி நேரமும் இயங்கும்படி வெள்ள கட்டுப்பாட்டு அறை செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.