விஜய் பிறந்த நாளையொட்டி கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
ஆத்துார், சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., சார்பில், அக்கட்சி தலைவர் விஜயின், 51வது பிறந்த நாளையொட்டி, தலைவாசலில் உள்ள தனியார் மண்டபத்தில், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா, மாவட்ட செயலர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது.அப்போது, தலைவாசல் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த, 101 கர்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், தாலி கயிறு, பித்தளை விளக்கு, பழங்கள், இனிப்பு, சீர்வரிசை பொருட்கள் வழங்கியதுடன், அவர்களுக்கு எலுமிச்சை, புளி, தயிர் உள்பட ஆறு வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. முன்னதாக மகளிர் அணியினர், கர்ப்பிணிகளுக்கு ஆரத்தி எடுத்தனர்.விழாவில், மாவட்ட செயலர் வெங்கடேசன் பேசுகையில், ''த.வெ.க., மாற்றுக்கட்சி இல்லை; தமிழகத்திற்கு மாற்றம் தருவதற்காக துவங்கப்பட்ட கட்சி. விஜய் பிறந்த நாளில், 30 இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம், 1,000 மாணவ, மாணவியருக்கு பள்ளி உபகரணங்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக மக்கள் எழுச்சியாக உள்ளதால், 2026ல், தமிழகத்தில் மாற்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது,'' என்றார்.மாவட்ட இணை செயலர் விஜய், மாவட்ட பொருளாளர் முத்துகுமார், துணைச் செயலர் அரவிந்த்குமார், செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.