தீ விபத்தில் ஓட்டு வீடு நாசம் ரூ.2 லட்சத்துக்கு பொருட்சேதம்
பனமரத்துப்பட்டி :பனமரத்துப்பட்டி, ஈச்சமர பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். அவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டை கரண் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். நேற்று காலை கரண் வீட்டை பூட்டிவிட்டு, வேலைக்கு சேலம் சென்றார். இந்நிலையில் காலை, 10:45 மணிக்கு வீடு தீப்பற்றி எரிந்தது. அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள், தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மக்கள் தகவல்படி, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் மேற்கூரை, கதவு, ஜன்னல், கட்டில், ப்ரிட்ஜ், வாசிங் மிஷின், 'டிவி', துணிகள், பீரோ, மின் உபகரணங்கள், வீட்டில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீக்கிரையாகின. வராண்டாவில் நிறுத்தியிருந்த 'ஜெஸ்ட்' மொபட் கருகியது. 2 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் நாசமாகின. வருவாய்த்துறையினர், பனமரத்துப்பட்டி போலீசார், தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.