| ADDED : ஜூலை 01, 2024 03:38 AM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 39.75 அடியாக சரிந்த நிலையில், 50 கி.மீ., சுற்றளவில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் திலேப்பியா மீன்கள் அதிகளவில் வலையில் சிக்குகின்றன. குறிப்பாக கொளத்துார், மேட்டுபழையூர் அடுத்த கோவில்காடுகுட்டை, கோட்டையூர் சுற்றுப்பகுதிகளில் இந்த வகை மீன்களை, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் பிடிக்கின்றனர். தொடர்ந்து மீன்களை தரம் பிரித்து, கால் கிலோவுக்கு மேல் உள்ள மீன்களை மட்டும் வியாபாரிகள் கொள்முதல் செய்து ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.கால் கிலோவுக்கு குறைவான மீன்களை, அணை கரையோர பகுதிகளில் மொத்தமாக கொட்டி செல்கின்றனர். இதுபோல் அப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கருவாடாகி துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. இதனால் அணையில் மீன்வளம் பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனால், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடிக்கும் மீன் குஞ்சுகளை, மீனவர்கள் வீணடிப்பதை தடுக்க மீன்வளத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.