சேலத்தில் இடி மின்னலுடன் கன மழை
சேலம், சேலத்தில், நேற்று இரவு இடி மின்னலுடன் பெய்த மழையால், வெப்பம் தணிந்து சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.சேலத்தில், அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்து, 10 நாட்களுக்கு மேலாகியும், கோடைகால வெப்பம் குறையாமல் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் நேற்றிரவு, 8:00 மணிக்கு சாரலாக துவங்கிய மழை, சற்று நேரத்தில் இடி மின்னல் காற்றுடன் கனமழையாக, ஒரு மணி நேரத்துக்கும் மேல் வெளுத்து வாங்கியது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீடு கடைகளுக்குள் புகுந்தது. சாலைகளில் சாக்கடை கழிவுநீருடன் கலந்த மழைநீர் வெள்ளம் போல் பாய்ந்தோடியதால், வாகன ஓட்டிகள் மெதுவாக ஊர்ந்து சென்றனர்.குறிப்பாக கிச்சிபாளையம், நாராயணநகர், பச்சப்பட்டி, அசோக்நகர், சங்கர் நகர், புது பஸ் ஸ்டாண்டு பகுதிகளில், மழைநீர் குளம் போல் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.* வாழப்பாடி சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு, 8:30 மணிக்கு இடி, மின்னலுடன் பெய்த மழையால், வெள்ளாளகுண்டம் பிரிவு ரோடு அருகே விவசாயி மயில், 55, என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தின் மீது, இடி விழுந்தது. இதனால், 50 அடி கொண்ட, 25 ஆண்டுகள் பழமை வாய்ந்த தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தென்னை மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் தென்னை மரம் தீயில் எரிந்து நாசமானது.* ஓமலுாரில் நேற்று இரவு, 8:10 மணிக்கு துவங்கிய மழை தொடர்ந்து இடி, மின்னலுடன் கனமழையாக மாறி கொட்டியது. பஸ் ஸ்டாண்ட், கடை வீதியில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. 45 நிமிடம் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.