| ADDED : ஜூன் 21, 2024 07:27 AM
வீரபாண்டி : பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண் உத்திகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் கிரிஜா அறிக்கை: வீரபாண்டி வட்டாரத்தில் தற்போது பரவலாக உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவ்வகை பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல் அதிகம் உள்ளன. இதை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண் உத்திகளை பயன்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். நோய், பூச்சி தாக்குதல்களை எதிர்க்கும் ரகங்களை தேர்வு செய்து பயிரிட வேண்டும். இன கவர்ச்சி பொறி அமைப்பதால் பூச்சிகளை கவர்ந்து அழித்து விடும். வேப்பக்கொட்டை சாறு, 5 சதவீதம், வேப்ப எண்ணெய், 2 சதவீதம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிப்பதால் பூச்சிகள் வராது. அசுவினி, காய் துளைப்பான் போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்த, 'தியோமெந்தாக்சம்' வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும். இலைச்சுருள், ஆந்த்ராக்ஸ், தண்டு சொறி போன்ற நோய்களை கட்டுப்படுத்த மென்கோசிப் பூச்சிக்கொல்லி தெளிக்கலாம். வெள்ளை ஈக்கள் மூலம் மஞ்சள் சோகை நோய் பரவி மகசூல் பாதிக்கும். இதை கட்டுப்படுத்த, 'இமிடோகுலோபிரிட்' அல்லது 'மைத்தோயேட்' பூச்சி கொல்லியை பயிர்கள் நன்றாக நனையும் படி தெளிக்க வேண்டும்.