ஆத்துார்: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மலையரசன், நேற்று ஆத்துார் ஒன்றியம் அம்மம்பாளையம், துலுக்கனுார், வளையமாதேவி, பைத்துார், வானபுரம், கல்லுக்கட்டு, தவளப்பட்டி, புங்கவாடி, தாண்டவராயபுரம், சீலியம்பட்டி, மல்லியக்கரை ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்றும், வேனில் சென்றபடியும், உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது மலையரசன் பேசியதாவது:பா.ஜ.,வின் ஆட்சியை அகற்றுவதற்கு, 'இண்டியா' கூட்டணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி வெற்றி பெற்றால், இந்தியாவில் புது மாற்றம் நிகழும். முதல்வர் ஸ்டாலின், பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு காலை உணவு, புதுமைப்பெண், மக்களின் முதல்வன் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து செயல்படுத்தி வருகிறார்.உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி ஏராளமான நிறுவனங்களை வரவழைத்து, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்து வருகிறார். பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை, அரசு டவுன் பஸ்சில் இலவச பயணம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை, தமிழக அரசு வழங்குகிறது. தி.மு.க., ஆட்சியில் தான், அதிகளவில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக, முதல்வர் ஸ்டாலின் மாற்றி வருகிறார். இங்குள்ள திட்டங்களை பார்த்து, வட மாநிலங்களில் செயல்படுத்துகின்றனர். அ.தி.மு.க., பொய் தகவலை கூறி வருகிறது. கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., மீண்டும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு கொடுத்தால் அதிகளவில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.இதில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், ஆத்துார் ஒன்றிய செயலர் செழியன், நகர செயலர்களான, ஆத்துார் பாலசுப்ரமணியம், நரசிங்கபுரம் வேல்முருகன், வளையமாதேவி ஊராட்சி தலைவர் வரதராஜன், காங்., மாவட்ட தலைவர் அர்த்தனாரி, ம.தி.மு.க.,வின் மாவட்ட செயலர் கோபால்ராசு, வி.சி., நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.