| ADDED : மார் 14, 2024 01:14 AM
சேலம், பா.ம.க.,வை சேர்ந்த, சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், கடந்த, 11ல் ஓமலுார் போலீஸ் ஸ்டேஷன் முன் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, ஓமலுார் அருகே அரசமரத்துக்காட்டில் நிழற்கூட இடிப்பு விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய போலீஸ் மறுப்பதாக குற்றம்சாட்டினார்.தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், 'சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரிடம் வசூல் வேட்டை நடத்துகிறார்' என குற்றம்சாட்டினார். இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்தனர். அதன் அறிக்கைப்படி, இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை, மேற்கு மண்டலம் கோவைக்கு மாற்றி, கமிஷனர் விஜயகுமாரி, நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதேபோல் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கை குறித்து உயரதிகாரிகள் பார்வைக்கு கொண்டு வராத, சூரமங்கலம் நுண்ணறிவு பிரிவு எஸ்.எஸ்.ஐ., செல்வம் இரும்பாலைக்கும், அங்கு பணியாற்றிய ராஜ்குமார், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர்.