ஓமலுார் : உள்ளூர் பூக்கள் வரத்து இல்லாததால் ஓசூரில் இருந்து பட்டன், பன்னீர் ரோஜாக்கள் கொண்டு வந்து விற்கப்படுகின்றன. இதனால் மதியம் வரை நடக்கும் பூசாரிப்பட்டி மார்க்கெட் காலையிலேயே முடிகிறது.சேலம் மாவட்டம் ஓமலுார், காடையாம்பட்டி வட்டாரங்களில் சாமந்தி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. சம்பங்கி, குண்டுமல்லி, கோழி கொண்டை, மரிக்கொழுந்து உள்ளிட்டவையும் பயிரிடப்படுகின்றன. இரு மாதங்களாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, வறட்சியால் பல்வேறு பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சாமந்தி பூக்கள் உற்பத்தி சரிந்தது.வழக்கமாக காடையாம்பட்டி தாலுகா பூசாரிப்பட்டி தினசரி பூ மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து, 10 டன் பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்கப்படும். அங்கிருந்து சேலம், ஈரோடு, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பப்படும். ஆனால் போதிய பூக்கள் வரத்து இல்லாததால், ஓசூரில் இருந்து ஒரு மாதமாக, பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன. நேற்று, 3 கிலோ பட்டன் ரோஜா கொண்டுவரப்பட்ட நிலையில், கிலோ, 150 முதல், 200 ரூபாய் வரை விற்பனையானது. மேலும் பூக்கள் வரத்து குறைவால், மதியம் மட்டுமின்றி, மாலையும் நடந்து வந்த தினசரி மார்க்கெட், தற்போது காலை, 10:00 மணிக்கே முடிந்துவிடுகிறது.இதுகுறித்து பூசாரிப்பட்டி வியாபாரி சக்திவேல் கூறியதாவது:மார்க்கெட்டுக்கு உள்ளூர் வட்டத்தில் இருந்து போதிய பூக்கள் வரத்து இல்லை. இதனால் ஓசூரிலிருந்து ரோஜா கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன. இனி உள்ளூரில் இருந்து, ஆயுத பூஜை நேரத்தில் மட்டும் சாமந்தி உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓமலுார் பகுதிகளில் சில இடங்களில் மட்டும் துலுக்கமல்லி பயிட்டுள்ளனர். சில நாட்களாக மழையால் அதன் மொட்டுகளும் அழுகி வளர்ச்சி குறையும் சூழல் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஓமலுார் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழை காலங்களில் தண்ணீர் வெளியேறும்படி முறையாக வடிகால் அமைக்க வேண்டும். இதன்மூலம் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்க முடியும்' என்றனர்.