சேலம் : சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா காவடி ஊர்வலத்துடன் நேற்று தொடங்கியது. அதில் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், திருக்காவடிகளுடன் திருமணிமுத்தாற்றுக்கு சென்றனர். ஆற்றுப்பிள்ளையார் கோவில் அருகே புனிதநீரால் காவடிகளுக்கு அபி ேஷகம் செய்து, மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசி மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அங்கிருந்து மேள தாளம் முழங்க, பக்தர்கள் காவடிகளுடன் ஆடியபடி, கந்தசாமி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இன்று காலை, 6:00 மணிக்கு கோ பூஜையுடன் மூலவர் கந்தசாமிக்கு அபிேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடக்கும். மாலையில் வள்ளி, தெய்வானையுடன் கந்தசாமி மயில் வாகனத்தில் உலா வந்து அருள்பாலிப்பார். ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலுக்கு நேற்று, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து முருகனுக்கு பால் அபி ேஷகம் செய்தனர். மூலவர், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இன்று தேர் திருவிழா நடக்கிறது. அதேபோல் ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பவுர்ணமி நாளையொட்டி சுப்ரமணிய சுவாமி புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும் ஆத்துார் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் இன்று மாலை, 4:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.திருவீதி உலா
தாரமங்கலம், 20வது வார்டில் உள்ள தணிகை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை செய்தனர். மாலை வள்ளி, தெய்வானை, தணிகை முருகன், முக்கிய வீதிகள் வழியே திருவீதி உலாவாக சென்றனர். அதேபோல் தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே சுப்ரமணியர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.