முன்பதிவு டிக்கெட் வாங்க குவிந்த பயணியர் அவதி ஆத்துாரில் கணினி மையம் அமைக்க வலியுறுத்தல்
ஆத்துார்: ஆத்துாரில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்சில் செல்வதற்கு டிக்கெட் வாங்க, 4 மணி நேரம் காத்திருந்து பயணியர் அவதிப்பட்டனர். இதனால் ஆன்லைன் மூலம் கணினி சேவை முன்பதிவு மையம் அமைக்க வலியுறுத்தினர்.தீபாவளியையொட்டி, 4 நாட்கள் தொடர் விடுமுறையால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விடுமுறை முடிந்து சென்னை செல்வதற்கு நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள, ஆத்துார் கிளை பணிமனை சேவை மையத்தில் ஏராளமானோர் டிக்கெட் வாங்க வந்தனர். 6:00 மணிக்கு, சேவை மையத்துக்கு ஒரு அலுவலர், டிக்கெட் வினியோகிக்க வந்தார். அங்கு, 400க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில், ஒருவர் மட்டும் வந்ததால், பயணியர், சேவை மையத்தை சூழ்ந்து வாக்குவாதம் செய்தனர். பின் டிக்கெட் கொடுத்தார். 7:00 மணிக்கு, மற்றொரு அலுவலர் வந்து டிக்கெட் கொடுத்தார். 8:30 மணி வரை, டிக்கெட் வழங்கப்பட்டது. இதன்மூலம் ஆத்துாரில் இருந்து, 8 பஸ்கள், சென்னைக்கு இயக்கப்பட்டன. இதுகுறித்து பயணியர் கூறுகையில், 'தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் ஆத்துாரில் கணினி மூலம் ஆன்லைன் டிக்கெட் பெற முடியாத நிலை உள்ளதால் சேலம் செல்ல வேண்டியுள்ளது. ஆத்துாரில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அத்துடன் ஆத்துாரில் ஆன்லைன் டிக்கெட் பெறும்படி கணினி சேவை மையம் அமைக்க வேண்டும்' என்றனர்.ஆத்துார் அரசு கிளை பணிமனை அலுவலர்கள் கூறுகையில், 'ஆத்துாரில் இருந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அதிகளவில் பயணியர் செல்கின்றனர். பண்டிகை காலத்தில் கூடுதலாக பயணியர் வருவதால், கணினி மூலம் ஆன்லைனில் முன்பதிவு மையம் அமைக்கும்படி பயணியர் தெரிவித்தனர். இதுகுறித்து சேலம் கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதால் ஆத்துாரில் விரைவில் கணினி சேவை மையம் அமைக்கப்படும்' என்றார்.