பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே காமலாபுரம் ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. இதில், காமலாபுரம், பள்ளிவீரன்காடு என, தலா, 6 வார்டுகளை உள்ளடக்கியதாக, இரு ஊராட்சிகளாக வரை படம் தயாரித்து அதற்கான பணி நடந்து வருகிறது. இதனால் காமலாபுரம் ஊராட்சி, 7வது வார்டு மக்கள், நேற்று, ஓமலுார் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அப்போது, 'எங்கள் பகுதி, காமலாபுரம் மையப்பகுதியில் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ளது. அதனால் புது ஊராட்சியோடு, எங்கள் பகுதியை இணைக்கக்கூடாது' என கூறினர். தொடர்ந்து பி.டி.ஓ., உமாசங்கரிடம், மக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, பி.டி.ஓ., கூறியதால், மக்கள் கலைந்து சென்றனர்.