இடஒதுக்கீட்டில் மருத்துவ வாய்ப்பு தம்மம்பட்டி மாணவிக்கு பாராட்டு
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி, சந்தை ரோட்டை சேர்ந்த விவசாயி செந்தில்முருகன், சசிரேகா தம்பதியின் மகள் சந்தியா. இவர் தம்மம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். 'நீட்' தேர்வில், 413 மதிப்பெண் பெற்ற அவருக்கு, அரசின், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் திருவள்ளூர் இந்திரா மருத்துவ கல்லுாரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது.தம்மம்பட்டியில் இருந்து முதன்முதலில், இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த சந்தியாவுக்கு, ஊர்மக்கள், நண்பர்கள் குழு சார்பில், தம்மம்பட்டி சிவன் கோவில் மண்டபத்தில் பாராட்டு விழா நேற்று நடந்தது. அதில் சந்தியாவுக்கு பொன்னாடை போர்த்தி, கேடயம், 5,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கினர். பின், 'கேக்' வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.