உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகர் பகுதிகளில் அதிக தற்கொலை

நகர் பகுதிகளில் அதிக தற்கொலை

சேலம்: ''கிராமப்புறங்களை காட்டிலும், நகர்ப்பகுதிகளில் அதிக அளவு தற்கொலைகள் நடைபெறுகின்றன,'' என சேலத்தில் நடந்த கருத்தரங்கில், பெங்களூரு தற்கொலை தடுப்பு மைய மேலாளர் லதா ஜேக்கப் பேசினார்.சேலம் ஐந்து ரோடு ஐ.எம்.ஏ., ஹாலில், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில் பிங்கி பாலாஜி தலைமை வகித்தார்.சேலம் போலீஸ் உதவிக்கமிஷனர் ரவீந்திரன் பேசுகையில்,''மாணவர்களிடையே தற்போது தற்கொலை எண்ணம் அதிகரித்துள்ளது. சினிமாவை பார்த்துக்கூட, தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களும் உள்ளனர். அவர்களை படி படி என, டார்ச்சர் செய்வதாலும், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதை குறைக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

பெங்களூரு தற்கொலை தடுப்பு அமைப்பான சகாய் கிளினீக் மேனேஜர் லதா ஜேக்கப் பேசியதாவது:பொதுவாக தற்கொலை, கிராமப்புறங்களை காட்டிலும், நகர்ப்பகுதிகளில் அதிக அளவு காணப்படுகிறது. நகர்ப்பகுதிகளில், பகிர்ந்து கொள்வதற்கு ஆட்கள் இல்லாத நிலை, உறவுகள் பலவீனம், தனியாக இருப்பது உள்ளிட்டவை தற்கொலைக்கு முக்கியமாக அமைகிறது.ஒரு லட்சம் பேரில், 16 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். உலக அளவில் மூன்று விநாடிக்கு ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். 40 விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என, புள்ளிவிவரங்கள் கூறுகிறது. இந்தியாவில் மெட்ரோ பாலிடன் நகரங்களில் பெங்களூருவில் அதிக அளவில் தற்கொலைகள் நடக்கின்றன.இதில் கல்வி, வேலைவாய்ப்பின்மை, திருமண பிரச்சனை, உறவு சிக்கல் வரதட்சணை பிரச்சனை, பணப்பிரச்சனை, இயலாமை, சட்டப்பிரச்சனை உள்ளிட்டவை முக்கிய பிரச்சனையாக உள்ளது. தற்கொலை செய்து கொள்பவர்களில், 71 சதவிகிதம் பேர் திருமணமானவர்களாகவே உள்ளனர். தற்கொலைக்கான காரணத்தை தெரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே, தற்கொலையை தடுக்க முடியும்.ஒருவரின் நடத்தை வழக்கமாக இல்லாவிட்டாலே அவர் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்த வகையான மன அழுத்தத்தில் அவர் சிக்கியுள்ளார் என்பதை கண்டறிய, சம்பந்தப்பட்டவரிடம் பேசினால் மட்டுமே முடியும். தூக்கமின்மை, பிரிவு, இயலாமை உள்ளிட்ட பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படும். மன அழுத்தத்துக்கு ஆளானவர்களுக்கு ஆறுதல் மட்டுமே உடனடி தேவை. இதை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிக எளிதில் தர முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.இதில் திரளான பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கார்த்திக், பத்மினி பாலாஜி, மஞ்சு ஸ்ரீ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை