ஆத்துார்: எஸ்.ஐ., உதவியுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக குற்றம்சாட்டி, அ.தி.மு.க., ஊராட்சி தலைவி பெயரில் அனுப்பிய புகார் குறித்து, டி.எஸ்.பி., விசாரிக்கிறார்.சேலம் மாவட்டம் கல்பகனுார் ஊராட்சி தலைவி ராஜாத்தி பெயரில் ஆத்துார் தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள பெட்டியில், டி.ஜி.பி., சேலம் டி.ஐ.ஜி., கோவை ஐ.ஜி., சேலம் எஸ்.பி., ஆத்துார் டி.எஸ்.பி., சேலம் கலெக்டருக்கு, நேற்று முன்தினம் தபால் போடப்பட்டிருந்தது.அதில், 'ஸ்டாம்ப்' ஒட்டப்படவில்லை. இதனால் தபால் அலுவலகத்தில் இருந்து, ராஜாத்தியை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர், 'நான் எந்த தபாலும் அனுப்பவில்லை' எனக்கூறி அதன் அலுவலகம் சென்றார். தபாலை பிரித்து பார்த்தபோது, போலி கையெழுத்திடப்பட்டிருந்தது தெரிந்தது.அதில், 'கல்பகனுாரில் உள்ள சிவகங்கைபுரம், ராசி நகர், கூத்தனார் மடுவு, கல்பகனுார்புதுார், மொரப்பங்காடு, மாரியம்மன் நகர் ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம், போதை பொருட்களை சிலர்(பெயர்களுடன்) அதிகளவில் விற்கின்றனர். எஸ்.ஐ.,யிடம்(பெயருடன்) தெரிவித்தால், சம்பந்தப்பட்டவர்களிடமே தகவல் கூறுகிறார். மாதந்தோறும் போலீசார், மாமூல் வாங்கிக்கொள்கின்றனர். எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுப்பதோடு போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.இதனால் ராஜாத்தி, நேற்று ஆத்துார் ஊரக போலீசில் புகார் அளித்தார். அதில், 'என் பெயருடன், கலெக்டர் உள்ளிட்டோருக்கு மர்ம நபர் தபால் அனுப்பியுள்ளார். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்படி தபால் அனுப்பியவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், ''எஸ்.ஐ., மீதான புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரிக்கப்படுகிறது,'' என்றார்.