உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சினிமா நகருக்கு தேவை சீரமைப்பு பணி

சினிமா நகருக்கு தேவை சீரமைப்பு பணி

சேலம்: சேலம் நகரின் மத்தியில், சாலை வசதியின்றியும், சாக்கடை வசதியின்றியும் பல ஆண்டுகளாக மக்கள் தவிக்கின்றனர். சேலம் மாநகராட்சி, சூரமங்கலத்துக்கு உட்பட்ட, 24வது வார்டில், சினிமா நகர், சின்னேரி வயல்காடு, சாமிநாதபுரம், அங்கம்மாள் காலனி, பள்ளப்பட்டி, கந்தம்பட்டி உள்பட பல பகுதிகள் உள்ளன. பெரும்பாலான இடங்களில் சாலை வசதியின்றியும், சாக்கடை வசதியின்றியும் மக்கள் தவிக்கின்றனர். சினிமா நகர் பகுதி, சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் அமைந்துள்ளது.

சேலம் சினிமா நகரில் வசித்து வரும் பிலிம் டிஸ்டிரிபியூட்டர் தசரதன் கூறியதாவது: கடந்த 13 ஆண்டுகளாக, இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். குடிதண்ணீர் மட்டும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் வந்து விடுகிறது. தெரு விளக்கு வசதியும் உள்ளது. ஆனால், சாலை வசதியோ, சாக்கடை வசதியோ இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்படுகிறோம். சினிமா நகரில் அமைந்துள்ள தெருக்களில் சாக்கடை வசதி கேள்விக்குறியாக உள்ளது. சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. சாக்கடை நீரில் எப்போதும் கொசுக்களை மட்டுமே காண முடியும். இரவு நேரம் சாக்கடை நீரில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் அலுவலகங்கள், வீடுகளில் புகுந்து அனைவரையும் துவம்சம் செய்து விடுகிறது.

மாதேஸ்வரன் கூறியதாவது: சினிமா நகரில் அமைந்துள்ள மூன்று சாலைகளிலும் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. மழை காலத்தில் சாலையில் நடப்பதற்கே கஷ்டமாக இருக்கும். பல ஆண்டுகளாக தார் சாலை போட்டுத்தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதி கவுன்சிலர் பெரியண்ணனும் கண்டுகொள்ளவில்லை. இப்பகுதியில், 150 பிலிம் டிஸ்டிரிபியூட்டர் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதில், பணிபுரியும் மக்கள் இங்கு வசிக்கின்றனர். முறையாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், கட்டிட வரி கட்டணம் ஆகியவற்றை கட்டி வருகிறோம். இரவு நேரத்தில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த முடியவில்லை. மாதம் ஒரு முறை குப்பைகளை அள்ளுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

சின்னேரி வயல்காடு பகுதியை சேர்ந்த ஜான் கூறியதாவது: இப்பகுதி புது பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே அமைந்துள்ள போதிலும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதில் மாநகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. சாலை வசதி சரியாக இல்லாததால், காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மிகவும் அவஸ்தைப்படுகின்றனர். கந்தம்பட்டி, பைபாஸ் சாலை வரை ரோட்டில் நடப்பது மிகவும் கடினமாக உள்ளது. சாலை வசதி செய்து தர வலியுறுத்தி, மாநகராட்சி கமிஷனரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மொபைல் ஃபோன் இணைப்புக்காக சாலையை தோண்டி கேபிள் ஒயர்கள் அமைத்தனர். அதன் பின், அந்த இடத்தை சீர் செய்யாமல் விட்டு விட்டனர். இதனால், சின்னேரி வயல்காடு பகுதியில் உள்ள ரோடு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பா.ம.க., 24வது வார்டு கவுன்சிலர் பெரியண்ணன் கூறியதாவது: அங்கம்மாள் காலனியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் பாதியிலேயே நிற்கிறது. சினிமா நகரில் சாக்கடை வசதி இல்லை என்பதும், தார் சாலை வசதியில்லை என்பதும் உண்மைதான். பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின், அப்பகுதியில் சாலை வசதி மேம்படுத்தப்படும். சாக்கடை வசதி சீர் செய்யப்படும். எம்.ஜி.ஆர். நகர், கந்தம்பட்டி, எட்டிமரத்துவட்டம் பகுதிகளில் தார் சாலை அமைக்க, 50 லட்சம் ரூபாய்க்கு ஒர்க் ஆர்டர் விடுக்கப்பட்டும், இதுவரை பணிகள் துவங்கவில்லை. மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனமே காரணம். கந்தம்பட்டியில் இருந்து பிள்ளையார் கோவில் வரை குடிநீர் பைப் லைன் போடும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 15 இடத்தில் குடிதண்ணீர் சின்டெக்ஸ் தொட்டி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 55 வீடுகளுக்கு சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக போர்வெல் போடும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ