உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரிசி கடத்துவதாக சேல்ஸ்மேன் மீது புகார்: ஆர்.டி.ஓ., நேரில் விசாரணை

அரிசி கடத்துவதாக சேல்ஸ்மேன் மீது புகார்: ஆர்.டி.ஓ., நேரில் விசாரணை

கெங்கவல்லி: கெங்கவல்லியில், ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் முறைகேடு செய்தது தொடர்பாக, சேல்ஸ்மேன் மீது எழுந்த புகார் குறித்து, ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் விசாரணை செய்தனர். மேலும், பறிமுதல் செய்த 'போலி' ரேஷன் கார்டுகளை ரத்து செய்யும்படி உத்தரவிடப்பட்டது. கெங்கவல்லியில் உள்ள மகாலட்சுமி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில், நடுவீதியில் ரேஷன் கடை (எண்: 1) செயல்பட்டு வருகிறது. அக்கடையில், நேற்று முன்தினம், அரிசி கேட்டு சென்ற பொதுமக்களிடம், அரிசி இல்லையென சேல்ஸ்மேன் பழனி, தகாத வார்த்தையில் பேசி அனுப்பியுள்ளார். மேலும், ரேஷன் அரிசி கடத்தல் நபர்களுக்கு, மூட்டை மூட்டையாக விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. நேற்று காலை 9 மணியளவில், சேல்ஸ்மேன் பழனி, ரேஷன் கடையை திறக்க வந்தபோது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தனர். புகாரின்பேரில், ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வராஜு தலைமையிலான கெங்கவல்லி தாசில்தார் பாப்பாத்தி, தாசில்தார் சக்திவேல் ஆகியோர், ரேஷன் கடையில் இருப்பு குறித்து நேரில் ஆய்வு செய்தனர். ரேஷன் கார்டுகளுக்கு அரிசி சப்ளை செய்த விபரம் குறித்து கேட்டறிந்தனர். மேலும், சம்மந்தப்பட்ட பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று, அரிசி பெற்ற விபரங்களை விசாரித்தனர். அப்போது, செல்வராஜ் என்பவரது வீட்டில் இருந்த ஐந்து ரேஷன் கார்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இரு ரேஷன் கார்டுகள் 'போலி' கார்டுகள் என தெரியவந்ததால், அந்த கார்டுகளை ரத்து செய்யும்படி வட்ட வழங்கல் அதிகாரிக்கு, ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். தொடர்ந்து, ரேஷன் கார்டுகளுக்கு அரிசி வழங்கியது குறித்து ஆய்வு செய்து, விற்பனை செய்த ரேஷன் கார்டுகளை ரத்து செய்யும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, ஆத்தூர் நெடுஞ்சாலையில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில், முறைகேடாக வைத்திருந்த மூன்று காலி சிலிண்டர்களை, வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை