சேலம்: ஆத்துார் அருகே, ராமநாயக்கன்பாளையம், காராமணிதிட்டு பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணையன், 75, கிருஷ்ணன், 70. சகோதரர்களான இவர்களுக்கு, அமலாக்கத்துறை அனுப்பிய தபாலில் ஜாதியின் பெயரை குறிப்பிட்டு அனுப்பியது சர்ச்சை எழுந்தது.இந்நிலையில் நேற்று அவர்கள், சேலம் மாவட்ட எஸ்.பி., அருண்கபிலனிடம் அளித்துள்ள புகார் மனு விபரம்:ராமநாயக்கன்பாளையம், காராமணி திட்டு பகுதியில், ஆறரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பயிர் செய்ய முடியாமல், அதே பகுதியை சேர்ந்த, பா.ஜ., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் குணசேகரன் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார். 2023, டிச., 29ல், நிலத்தில் உழவு செய்தபோது, அடியாட்களுடன் வந்து அவற்றை தடுத்து நிறுத்தினர். கடந்த ஜூன், 26ல், அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, ஜூலை, 5ல், ஆஜராகும்படி தபால் வந்தது. அந்த தபாலின் முகவரி பகுதியில், தங்களது ஜாதி பெயரை குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். இதுநாள் வரை, குணசேகரன் குடும்பத்தினர் மூலம் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. நிலத்துக்கும், தங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, பா.ஜ., மாவட்ட செயலர் குணசேகரன் கூறுகையில், ''நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. குத்தகை நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. கடன் தொகையை வழங்கும்படி கூறினோம். எங்கள் மீது பொய்யான புகார் கூறி வருகின்றனர்,'' என்றார்.