சுங்க கட்டண சுரண்டலில் மட்டுமே மத்திய அரசு குறி; மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் குற்றச்சாட்டு
சேலம்: பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், சுங்கக்கட்டண சுரண்டலில் மட்டுமே, மத்திய அரசு குறியாக உள்ளது. இதை கண்டித்து, அனைத்து அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தனராஜ் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில், 60 கிலோ மீட்டர் துாரத்துக்கு இடையே சுங்கச்சாவடிகளையும், நகர்ப்புறத்திலிருந்து, 13 கிலோ மீட்டருக்குள் உள்ள சுங்கச்சாவடிகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், சாலை அமைக்கும் தொகை வசூலான பின், 40 சதவிகித கட்டணம் குறைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் காலாவதி சுங்கச்சாவடிகளை நீக்காததது மட்டுமின்றி, ஆண்டுதோறும், 10 சதவிகிதம் வரை சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது சட்ட விரோத செயலாக தெரிகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சுங்க சாவடிகளை மூடவோ, கட்டணத்தை குறைக்கவோ எந்த திட்டமும் அரசிடம் இல்லை என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர் வீரேந்தர் சம்பியால் தெரிவித்துள்ளார்.இதை தன்னிச்சையாக அறிவித்தாரா அல்லது மத்திய அரசின் முடிவாக அறிவித்தாரா என்பது தெரியவில்லை. இதற்கு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் சார்பில், கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை அகற்ற, பல கட்சிகளும் போராட்டம் நடத்திவிட்டன. தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பிரதான கட்சிகள், சுங்கச்சாவடிகளை நீக்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தன. ஆனால், தற்போது அனைவரும் இதை மறந்துவிட்டனர். இதனால், லாரி தொழில் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கான சுங்கக்கட்டணத்தை கட்டும் முறையை லாரிகளுக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இதுவரை ஏற்கப்படவில்லை.இந்நிலையில், சேட்டிலைட், ஜி.பி.எஸ்., முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க பரிசோதனை முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவை அமலாக்கப்பட்டால், லாரிகள் மட்டுமின்றி, கார் உள்ளிட்ட வாகனங்களும் அதிக சுங்கக்கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். பொதுமக்கள் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், சுங்கக்கட்டண சுரண்டலில் மட்டுமே, மத்திய அரசு குறியாக உள்ளது. இதை கண்டித்து, அனைத்து அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.