மேலும் செய்திகள்
ரதவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
21-May-2025
ஈரோடு, ஈரோட்டில், சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினரும், மாநகராட்சி நிர்வாகமும் நேற்று அகற்றியது. இதில், கடைகளை சேதப்படுத்தி அப்புறப்படுத்தியதால், வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட, நான்கு மண்டலங்களிலும் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சி நான்காம் மண்டலத்துக்கு உட்பட்ட, மூலப்பாளையம் முதல் ஆணைக்கல்பாளையம் ரிங் ரோடு வரை, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மணிகண்டன் தலைமையில், சாலை ஆய்வாளர் மீனாட்சி, மாநகராட்சி அலுவலர்கள், நகர திட்டக்குழு பணியாளர்கள், ஈரோடு தாலுகா போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இரண்டு கி.மீ., துாரத்துக்கு சாலையின் இருபுறமும், ஆக்கிரமித்து வைக்கப்பட்ட, 200க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள், விளம்பர பதாகைகள், இரும்பு தடுப்புகள் போன்றவை அகற்றப்பட்டன. இன்றும் (22) ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும் என, உதவி பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.ஈரோடு, மூலப்பாளையம் மாநகராட்சி நான்காம் மண்டலம் அலுவலகம் செல்லும் சாலை ஓரத்தில் நடைபாதையில் மீன் கடை, காய்கறி கடை, இரவு நேர கடைகள் அமைத்திருந்தனர். நேற்று காலை நெடுஞ்சாலைத்துறையினரும், மாநகராட்சி நிர்வாகத்தினரும் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, அங்கு இரவு நேர மீன் வறுவல் கடை நடத்தி வந்த முத்துசாமி என்பவரது தள்ளுவண்டி கடையை, பொக்லைன் மூலம் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அங்கிருந்த சில கடைகளின் ஆக்கிரமிப்புகளையும் இடித்து அகற்றி, பொருட்களை லாரிகளில் ஏற்றி சென்றனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள கூறியிருந்தால், நாங்களே அகற்றியிருப்போம். எங்கள் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில், பொக்லைன் மூலம் தள்ளுவண்டியை சேதப்படுத்தியது ஏற்க முடியாது என கூறி, 10க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பூந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போக செய்தனர்.
21-May-2025