வீரபாண்டி: நான்கு வழிச்சாலையில், ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கட்டப்பட்டு வரும் மூன்று மேம்பாலங்களால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.சேலம் - கோவை நான்கு வழிச்சாலை கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் இருந்து, உத்தமசோழபுரம் மேம்பாலம் செல்லும் வழியில் நெய்காரப்பட்டி சந்திப்பு பிரிவில், நான்கு வழிச்சாலையை கடக்கும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கி உயிர்பலிகள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் இப்பகுதியில், 15 கோடி ரூபாய் மதிப்பில், 30 மீட்டர் அகலம், 600 மீட்டர் நீளத்தில் புதிதாக இரட்டை வழி மேம்பாலம், அதன் நடுவே வாகனங்கள் நான்கு வழிச்சாலையை கடந்து சென்று வர, 12.5 மீட்டர் அகலம், 5.5 மீட்டர் உயரத்தில் சுரங்கவழி ஆகியவற்றை கட்டும் பணிகள் கடந்தாண்டு மே மாதம் துவங்கியது.தற்போது சுரங்கவழி பாதை பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும், இருபுறங்களிலும் மண் கொட்டி சமன்படுத்தும் பணிகள், சுற்றுச்சுவர் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 12 மாதங்களில் முடிக்க வேண்டிய பணிகளில் எட்டு மாதங்களில், 70 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ளது.கொம்பாடிப்பட்டி பிரிவுஇதே நான்கு வழிச்சாலை, சீரகாபாடி அருகே கொம்பாடிப்பட்டி பிரிவிலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதால், அங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், 18.43 கோடி ரூபாய் மதிப்பில், 30 மீட்டர் அகலம், 400 மீட்டர் நீளத்தில் இரட்டை வழி மேம்பாலம் அதன் நடுவே வாகனங்கள் சென்று வர, 12.5 மீட்டர் அகலம், 5.5 மீட்டர் உயரத்தில் சுரங்கவழி ஆகியவை கட்டும் பணி கடந்தாண்டு ஜூனில் துவங்கியது. ஓராண்டில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது சுரங்கவழி பணிகள் முடிந்து, மண் கொட்டி சமன்படுத்தும் பணி, சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. 50 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ளன.உத்தரமசோழபுரத்தில் மேம்பாலம்இதே போல், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் முன் கட்டப்பட்டுள்ள ஒருவழி மேம்பாலத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடந்ததை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், பழைய மேம்பாலம் அருகிலேயே, 24.76 கோடி ரூபாய் மதிப்பில், 13.5 மீட்டர் அகலம், 900 மீட்டர் நீளத்தில் புதிய மேம்பாலம் கட்டும் பணி கடந்த டிசம்பரில் துவங்கியது.சேலம் - கோவை நான்கு வழிச்சாலையில் நெய்காரப்பட்டியில் இருந்து சீரகாபாடி வரை, 5 கி.மீ., துாரத்தில் அடுத்தடுத்து மூன்று மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருவதால், கோவையில் இருந்து சேலம் வரும் வாகனங்கள், அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி சில கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் வரிசையாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கும் பகுதிகளில், குறுகலான சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்படுவதோடு, விபத்து நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், சில தனியார் பஸ்கள் சர்வீஸ் சாலையை தவிர்த்து, விதிமீறி எதிர் திசையில் சேலத்துக்கு வருவதால் விபத்துகள் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஓராண்டில் முடிக்க இலக்கு நிர்ணயித்து, நடந்து வரும் மேம்பால கட்டுமானங்கள் அதற்கு முன்பே முடிந்து, போக்குவரத்து வர வாய்ப்புள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.