பா.ம.க.,- எம்.எல்.ஏ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது
ஆத்துார், சேலம் பா.ம.க.,- எம்.எல்.ஏ.,க்கு, கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், ஆத்துாரில் கடந்த அக்.,21ல், ராமதாஸ் ஆதரவு சேலம் பா.ம.க.,- எம்.எல்.ஏ., அருள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பின், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் ஜெயபிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், எம்.எல்.ஏ., அருள், 'அன்புமணி ஆதரவு நிர்வாகிகள், காரை வழிமறித்து தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்தனர்' என, ஆத்துார் டவுன் போலீசில் புகார் அளித்தார். இதன்படி மாவட்ட செயலர் ஜெயபிரகாஷ் உள்பட, 42 பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.கடந்த, 4ல், பெத்தநாயக்கன்பாளையம், வடுகத்தம்பட்டியில் துக்க நிகழ்ச்சியின்போது, ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஏழு பேரை, ஏத்தாப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஆத்துாரை சேர்ந்த, ஒன்றிய துணை செயலர் வெங்கடேசன், 37, தமிழ்செல்வன், 29, ஆகியோரை கைது செய்திருந்தனர். இவர்கள் மீது, கடந்த அக்., 21ல், எம்.எல்.ஏ., அருள் புகாரில், ஆத்துார் டவுன் போலீசார், ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், வெங்கடேசன், தமிழ்செல்வன் ஆகியோரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.