சேலம்: சேலம் சூரமங்கலம் அடுத்த சேலத்தாம்பட்டி, குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராணி, 56. கணவனை இழந்த இவர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்து, திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து விசாரித்தனர்.அப்போது அவர் கூறியதாவது:சேலம் அண்ணா பட்டு மாளிகையில், 30 ஆண்டுகளாக துாய்மை பணியாளராக வேலை செய்து வந்தேன். கதர் கிடங்கில் நான் துாங்கி கொண்டிருந்த போது, ஊழியர்கள் என்னை போட்டோ எடுத்ததை தட்டி கேட்டேன். அதனால் எனக்கு வழங்க வேண்டிய, 3,712 ரூபாய் ஊதியத்தில், 1,856 ரூபாய் பிடித்து கொண்டு, மீதியை வழங்கினர். அதனால் பாதிக்கப்பட்ட நான், உதவி இயக்குனர் சந்திரசேகரனிடம் முறையிட போவதாக தெரிவித்தேன். அந்த ஆத்திரத்தில், சில ஊழியர்கள் சேர்ந்து கொண்டு, என்னை வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர். வாழ்வாதாரத்தை இழந்த நான், தற்கொலைக்கு முயன்றேன். பிடித்தம் செய்த சம்பளத்துடன், மீண்டும் வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.* காக்காப்பாளையம் அடுத்த நடுவனேரி, மேட்டுக்காட்டை சேர்ந்தவர் மல்லிகா, 50. இவரும் மனு கொடுக்க வந்தபோது, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து மீட்டனர். பின், மல்லிகா கூறியதாவது:எங்களுக்கும், பெரியப்பா சடையன் குடும்பத்தாருக்கும் நில பிரச்னை தொடர்பான வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சடையன் மகன் விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தார், பிரச்னை நிலத்தில் உள்ள பனைமரங்களை வெட்டியதோடு, தட்டிகேட்ட என்னை தாக்கிவிட்டனர். அத்துடன் தரக்குறைவாக பேசி மிரட்டுவதால் தற்கொலைக்கு முயன்றேன். இவ்வாறு கூறினார்.