வாழப்பாடி : வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், அத்தனுார்பட்டி, காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வாழை மரங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியது. அதற்கு தாக்கு பிடிக்காமல் வாழை மரங்கள் தாருடன் முறிந்து விழுந்தன. சில இடங்களில் அடியோடு சாய்ந்தன. சில இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்துள்ளன. இதனால் நஷ்டம் ஏற்பட்டதாக, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு, தமிழக அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தினர்.அதேபோல் பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பனைமடலில், நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அதில், 100க்கும் மேற்பட்ட வாழை மரம், நெல், மக்காச்சோளம், அரளி பூ செடிகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.ஏற்காட்டில் பனிமூட்டம்ஏற்காட்டில், 4 நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இதனால் இரவில், சில்லென்ற காற்று வீசுகிறது. இருப்பினும் பகலில் வெயில் தாக்கம் உள்ளது. நேற்று அதிகாலை முதல், ஏற்காடு டவுன், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டம் சூழ்ந்தது. வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர். காலை, 10:00 மணி வரை, 'குளுகுளு'வென மாறியதால், உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.டிரைவர் குடும்பம் அவதிமேட்டூர் நகராட்சி தங்கமாபுரிபட்டணத்தை சேர்ந்த, லாரி டிரைவர் சண்முகம், 72. மனைவி குணா, 71. இவர்களது மகன் பிரபு, 45. இரு மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது. பிரபுவுக்கு கால் ஊனம் என்பதால் பெற்றோருடன் கூரை வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் மேட்டூர் சுற்றுப்பகுதியில் மழை பெய்தது. சண்முகம் வீடு தாழ்வான இடத்தில் இருப்பதால், அவரது வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அத்யாவசிய பொருட்களை சண்முகம் குடும்பத்தினர் வெளியே எடுத்து வைத்தனர். மழைநீர் வீட்டினுள் தேங்கியதால் நேற்று இரவு துாக்கமின்றி தவித்தனர். மேலும் வீட்டில் புகுந்த மழைநீரை, வாளி மூலம் அள்ளி சாலையோரம் கொட்டினர். அதே பகுதியில் ராமசாமி ஓட்டு வீடு, பழனிசாமி தார்சு வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. இதன் பாதிப்புகளை மேட்டூர் வருவாய்துறை அலுவலர்கள் நேற்று பார்வையிட்டனர்.பகலில் வெயில்மேட்டூரில் கடந்த, 5ல், 19 மி.மீ., 7ல், 23.6 மி.மீ., மழை பெய்தது. இதனால் வெயில் தாக்கம் குறைந்தது. நேற்று அதிகாலை, மேட்டூர் சுற்றுப்பகுதியில் இடி, மின்னலுடன், 48.4 மி.மீ., மழை பெய்தது. இதனால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனினும் நேற்று மதியம் வழக்கம்போல் வெயில் தாக்கம் கூடுதலாக இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.மின்சாரம் பாய்ந்து பெண் பலிகொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி கத்திரிப்பட்டி அடுத்த கொண்டையனுாரான் கொட்டாயை சேர்ந்த, கட்டட தொழிலாளி பாலகிருஷ்ணன், 30. இவரது மனைவி பவித்ரா, 25. இவர்களுக்கு சஞ்சனா, 9, சுஷ்மித்ரா, 6, என, 2 மகள்கள் உள்ளனர். நேற்று அதிகாலை கத்திரிப்பட்டியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது பவித்ரா வசித்த தொகுப்பு வீட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. 6:00 மணிக்கு தேங்கி நின்ற நீரில் நின்றபடி இரும்பு கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.