சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பிற்பட்ட, மிகப்பிற்பட்ட, சீர்மரபினர், சிறுபான்மையினர் விடுதிகளில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்பதாக, பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இம்மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,க்களில் படிக்கும் இப்பிரிவு மாணவர்களுக்கென 45 விடுதிகள் உள்ளன. அதில், பள்ளி மாணவர்களுக்கு 21, மாணவிகளுக்கு 14, கல்லுாரி மாணவருக்கு 5, மாணவிகளுக்கு 5 விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகளில் வகுப்பு 4 முதல் பிளஸ் 2 வரையும், கல்லுாரி விடுதியில் பட்டம், மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மாணவ, மாணவிகள் சேர தகுதி உண்டு. விடுதிகளில் மாணவர்களுக்கு மூன்று வேளை உணவு, தங்கும் வசதி உண்டு. 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படும். 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நுால், வினா வங்கி புத்தகம் வழங்கப்படும்.இவ்விடுதிகளில் சேர பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது. வீட்டில் இருந்து பள்ளி, கல்லுாரி செல்லும் தொலைவு 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த விதி இல்லை. தகுதியுள்ள மாணவ, மாணவிகள் அந்தந்த பகுதி விடுதி காப்பாளர், சிவகங்கை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை இலவசமாக பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பள்ளி மாணவர்கள்ஜூன் 14க்குள்ளும், கல்லுாரி மாணவர்கள் ஜூலை 17 க்குள் விடுதி காப்பாளர் அல்லது சிவகங்கை பிற்பட்டோர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விடுதியில் சேரும் போது ஜாதி மற்றும் வருமான சான்று சமர்பிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு 5 இடங்கள் வழங்கப்படும்.