உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாக்கடை நீரில் குளியல்: பக்தர்கள் வேதனை

சாக்கடை நீரில் குளியல்: பக்தர்கள் வேதனை

திருப்புவனம்: திருப்புவனத்தில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்கள் வைகை ஆற்றில் தேங்கியுள்ள சாக்கடை நீரில் தான் குளிக்க வேண்டியுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.வைகை ஆற்றங்கரையில் திருப்புவனத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி வழிபட்டால் புண்ணியம் என கருதப்படுகிறது. இதற்காக காசிக்கு செல்ல முடியாத இந்துக்கள் பலரும் திருப்புவனம் வந்து முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி வழிபட்டு செல்கின்றனர். நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். திதி, தர்ப்பணம் வழங்க வரும் பக்தர்களிடம் சிவகங்கை தேவஸ்தானம் கட்டணம் வசூலிக்கிறது.மேலும் பக்தர்களுக்காக தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் 20க்கும் மேற்பட்ட கடைகள் மூலம் பேரூராட்சிக்கும் வருவாய் கிடைக்கிறது. திருப்புவனம் நகரில் பக்தர்கள் மூலமாக குறிப்பிட்ட அளவு வருவாய் கிட்டும் நிலையில் பக்தர்களுக்கு தேவையான எந்த வித வசதியும் செய்து தருவதில்லை. திதி, தர்ப்பணம் வழங்கும் பக்தர்கள் வைகை ஆற்றில் நீராடிய பின் சூரிய பகவானை தரிசனம் செய்வது வழக்கம், வைகை ஆற்றில் நகரின் மொத்த சாக்கடையும் கலந்து திதி, தர்ப்பணம் வழங்கும் இடத்தில் தேங்கி நிற்கிறது. நாள் கணக்கில் கிடக்கும் தண்ணீர் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதில்தான் பக்தர்கள் நீராட வேண்டியுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் ஒரே ஒரு குளியல் தொட்டியில் சொட்டு சொட்டாக விழும் தண்ணீரில் தான் அனைவரும் நீராட வேண்டியுள்ளது. இதனால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக பக்தர்கள் புலம்புகின்றனர். பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், தேவஸ்தான நிர்வாகத்திடமும் பக்தர்கள் முறையிட்டும் இன்று வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாதாரண நாட்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்களும் அமாவாசை உள்ளிட்ட தினங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் வந்து செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ