| ADDED : ஜூலை 17, 2024 12:04 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பிரதமரின் கிசான் யோஜனா சம்மான் திட்டத்தில் கவுரவ நிதி பெறும் விவசாயிகளின் விபரம் அலைபேசி 'ஆப்' மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.பிரதமர் மோடி, இந்தியாவில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை ரூ.6,000 கவுரவ நிதி உதவி வழங்கும், பிரதமரின் கிசான் யோஜனா சம்மான் திட்டத்தை துவக்கி வைத்து, செயல்படுத்தி வருகிறார்.சிவகங்கை மாவட்டத்தில் 63,929 விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே பிரதமரின் கவுரவ நிதி 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மூன்று ஆண்டிற்கு ஒரு முறை கவுரவ நிதி உதவி பெறும் விவசாயிகளின் விபரங்களை சேகரித்து தொடர்ந்து அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அந்தந்த வேளாண்மை அலுவலர்களின் அலைபேசிக்கென வழங்கப்பட்டுள்ள 'ஆப்' மூலம் அந்தந்த வட்டார அளவில் உள்ள வேளாண்மை அலுவலகங்களில் விவசாயிகளின் முகம், கண்புருவம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு, அவர்களை உறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை இம்மாவட்டத்தில் 59,535 விவசாயிகள் தொடர்ந்து பிரதமரின் கவுரவ நிதி உதவியை பெற்று வருகின்றனர்.வாழ்வியல் உறுதி தன்மை அளிக்காத விவசாயிகள் 4,394 பேரின் முகம், கண் விழிகளை அலைபேசி ஆப் மூலம் பதிவிறக்கம் செய்து, அவர்களுக்கு தொடர்ந்து பிரதமரின் கவுரவ நிதி உதவி கிடைக்க வேளாண்மை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். எனவே பிரதமரின் நிதி உதவி கிடைக்காத விவசாயிகள், நேரடியாக அந்தந்த வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு, அலைபேசி 'ஆப்'பில் விபரங்களை பதிவு செய்து, தொடர்ந்து பிரதமரின் கவுரவ உதவி தொகை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.