| ADDED : மே 14, 2024 12:15 AM
சிவகங்கை : விருதுநகர்-திருச்சி ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகரில் காலை 6:20 மணிக்கு புறப்படும் விருதுநகர்-திருச்சி ரயில் (ஞாயிறு தவிர) அனைத்து நாட்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி வழியாக திருச்சிக்கு காலை 11:20க்கு சென்று சேரும். தினமும் அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகள்,ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்களுக்கு இந்த ரயில் பயனுள்ளதாக உள்ளது. தற்போது 7 பெட்டிகளுடன் விருதுநகர் - திருச்சி ரயில் இயக்கப்படுகிறது.பஸ் கட்டணத்தை விட குறைவான கட்டணமே இந்த ரயிலில் வசூலிக்கப்படுகிறது. இதனால், இந்த ரயிலில் நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மானாமதுரையில் இருந்து காரைக்குடி வரை அதிக பயணிகள் செல்வதால், உட்கார இடமின்றி நின்றுகொண்டே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இது போன்ற பிரச்னையை தவிர்க்க தினமும் இயக்கப்படும் இந்த ரயிலில் கூடுதலாக பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள்நல சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.