| ADDED : மே 31, 2024 06:23 AM
மானாமதுரை : மானாமதுரை வாரச்சந்தையில் வெள்ளைப் பூண்டு மற்றும் காய்கறி விலை மீண்டும் உயர்ந்துஉள்ளது. மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும்வாரச்சந்தையில் மதுரை, சிவகங்கை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள்,மளிகை, கருவாடு,மீன் உள்ளிட்ட பல்வேறு வித பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர்.கடந்த சில வாரங்களாக காய்கறி விலை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளைப் பூண்டு கிலோ ரூ.500க்கு மேல் விற்பனை ஆனது. பின்னர் படிப்படியாக விலை குறைந்து ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த வாரம் மீண்டும் வெள்ளைப்பூண்டு விலை ஏறியுள்ளது. முதல் ரக மலைப்பூண்டு ரூ.400க்கும்,2ம் ரக பூண்டு ரூ.300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று காய்கறிகளான கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.80க்கும், தக்காளி ஒரு கிலோ ரூ.50க்கும்,சின்ன பாகற்காய் ஒரு கிலோ ரூ. 240க்கும், பச்சை பட்டாணி ஒரு கிலோ ரூ. 200க்கும், பட்டர்பீன்ஸ், சோயா பீன்ஸ் ஆகியவை ஒரு கிலோ ரூ.240 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.வியாபாரிகள் கூறியதாவது: கடந்த வாரங்களில் நல்ல மழை பெய்ததை தொடர்ந்து காய்கறிகளின்விளைச்சல் அதிகமாக இருந்ததால் விலை குறைந்திருந்தது. கடந்த சில நாட்களாக வெயிலின்தாக்கம் அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.