உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி, விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் காணொலி காட்சியில் துவக்க விழா

கீழடி, விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் காணொலி காட்சியில் துவக்க விழா

கீழடி:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகையில் 10ம் கட்ட அகழாய்வு பணிகளையும் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று துவக்கி வைத்தார்.கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 2015ல் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நதிக்கரை நாகரிகம் குறித்த அகழாய்வு பணிகள் நடந்து அதில் செங்கல் கட்டுமானம், யானை தந்தத்தால் செய்யப்பட்ட சீப்பு, சுடுமண் பகடை, பொம்மை, வரிவடிவ எழுத்துகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன. மத்திய தொல்லியல் துறையின் மூன்று கட்ட அகழாய்விற்கு பின் மாநில தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடத்தப்படும். தேர்தல் காரணமாக பணிகள் தாமதமாக தொடங்கியுள்ளன. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார். விவசாயிகள் கார்த்திக், பிரபாகரன், ஜவஹர் ஆகியோரது 50 சென்ட் நிலத்தில் இப்பணிகள் நடக்கின்றன. இதற்காக கீழடியில் நடந்த விழாவிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். கீழடி தொல்லியல் இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய், கார்த்தி எம்.பி., தமிழரசி எம்.எல்.ஏ., ஊராட்சி தலைவர் வெங்கடசுப்பிரமணியன் பங்கேற்றனர்.

விஜய கரிசல்குளம்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் தொல்லியல் மேடு என்ற உச்சி மேடு என பெயரிடப்பட்டு 25 ஏக்கரில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்துள்ளன. முதல் கட்ட அகழாய்வில் 3254 பொருட்கள், இரண்டாம் கட்டத்தில் 4660 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இந்த இடம் அருகே கிழக்குப்பகுதியில் ஒன்றரை ஏக்கர் ஒதுக்கப்பட்டது.நேற்று காலை 11:00 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அகழாய்வு பணியை துவக்கினார். அகழாய்வு இடத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி., கலெக்டர் ஜெயசீலன், ரகுராமன் எம்.எல்.ஏ., தொல்லியல் இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி, உதவி இயக்குனர் பரத்குமார், ஊராட்சித் தலைவர்கள் ஆறுமுகம், கங்காள ஈஸ்வரி கலந்து கொண்டனர்.கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:இம்மாவட்டத்தில் வைப்பாற்றங்கரையில் செழித்தோங்கிய தமிழரின் பண்பாட்டை எடுத்து ஆவணப்படுத்த ஏற்கனவே இரண்டு கட்ட அகழாய்வு முடிந்துள்ளது.மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் கிடைத்த பொருட்கள் ரூ. 8 கோடியில் அமையும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் என்றார்.இவை தவிர திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நமண்டியில் இரண்டாம் கட்டம்; புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்டமாக ஆய்வு நடத்தப்பட உள்ளது.தென்காசி மாவட்டம் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானுார், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலுார் மாவட்டம் மருங்கூர் ஆகிய ஊர்களில், முதல் கட்ட ஆய்வு நடக்க உள்ளது.இவற்றையும் நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா துறை செயலர் மணிவாசன், தொல்லியல் துறை செயலர் உதயசந்திரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ