| ADDED : ஜூன் 14, 2024 05:05 AM
தேவகோட்டை: சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் மாம்பழத் திருவிழா எனும் ஆனித்திருவிழா நேற்று துவங்கியது. நேற்று காலை விழாவிற்கான கொடி மேளதாளத்துடன் கோயிலையும் , ஊருணியைச் சுற்றி எடுத்துவரப்பட்டது. கொடிக்கு அலங்காரம் செய்து மாம்பழத்தை வைத்து பூஜை செய்து கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தன.சொர்ண மூர்த்தீஸ்வரர் பெரியநாயகி அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. மாலையில் விழாவிற்கான காப்புக் கட்டுதல் நிகழ்வு நடந்தது. கேடக வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. சந்திரசேகர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, டி.எஸ்.பி. பார்த்திபன், சிவகங்கை சமஸ்தான மேலாளர் இளங்கோ, சிரஸ்தார் சுப்பிரமணியன், கோயில் கண்காணிப்பாளர் பாண்டிக்குமார் உட்பட கிராமத்தினர் சுவாமி தரிசனம் செய்தனர் .ஜூன் 17 ந்தேதி திருக்கல்யாணமும், 21 ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.