உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வைகை ஆற்றில் பழங்கால நாணயங்கள் தேடும் பணியில் கூலி தொழிலாளர்கள்

வைகை ஆற்றில் பழங்கால நாணயங்கள் தேடும் பணியில் கூலி தொழிலாளர்கள்

திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றில் பழங்கால நாணயங்கள், பாசிகள் சேகரிக்கும் பணியில் தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.பண்டைய காலத்தில் குடியிருப்புகள் அனைத்தும் ஆறு, கடற்கரையை ஒட்டியே அமைந்திருந்தன. இதில் வசித்தவர்கள், தங்களது தேவைகளுக்கு ஆறுகள், கடல்களை நம்பியே இருந்தனர். பண்டைய காலத்தில் ஆறுகள் உள்ளிட்ட நீர் வழித்தடங்களில் பண்டைய கால மக்கள் பயன்படுத்திய காசுகள், பாசிகள், பவளங்கள் உள்ளிட்டவைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை தேடி வெளிமாவட்ட கூலி தொழிலாளர்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம்.தற்போது தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் வைகை ஆற்றினுள் நாணயங்களை தேடி முகாமிட்டுள்ளனர். காலை ஆறு மணிக்கு வைகை ஆற்றில் இறங்கும் தொழிலாளர்கள் மதியம் இரண்டு மணிவரை தேடுகின்றனர். அதன்பின் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள கோயில்கள், மண்டபங்களில் சென்று தங்குகின்றனர். தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள மயிலாடுதுறையைச் சேர்ந்த குமார் கூறுகையில் : வைகை, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட எல்லா ஆறுகளிலும் 5பேர் முதல் 30பேர் வரை கொண்ட தொழிலாளர்கள் இணைந்து தேடுவோம்.பெரும்பாலும் செம்பு காசுகள், பண்டைய கால நாணயங்கள், பாசிகள் உள்ளிட்டவைகள் கிடைக்கும், இவற்றை நாணயங்கள் சேகரிப்பவர்கள், வரலாற்றுத்துறை ஆய்வாளர்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். திருப்புவனம் புதூரில் படுகை அணை கட்டுமான பணிகள் நடப்பதால் தேடுதல் வேட்டையில் பத்து நாட்களாக ஈடுபட்டு வருகிறோம். சோழர் காலத்து நாணயம், பாசிகள் கிடைத்துள்ளன என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை