| ADDED : ஆக 21, 2024 01:09 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கஞ்சா கடத்திய போது போலீசாரை தாக்கி தப்பிய இருவரை விரட்டியதில் ஒருவருக்கு கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. அவர் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு அருகே கச்சநத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணமுருகன் மகன் அகிலன் 24. திருப்புவனம் புதுார் முருகன் மகன் நிதிஷ்குமார் 22. திருப்புவனம் பெருமாள் கோயில் தெரு நந்தகோபால் மகன் கண்ணன் 21.மூவரும் ஆக.,17 காலை 7:30 மணிக்கு காளையார்கோவில் அருகே ஒட்டாணத்துக்கு காரில் சென்றனர். வழியில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், எஸ்.ஐ., குகன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அகிலன் உள்ளிட்ட 3 பேர் சென்ற காரை போலீசார் சோதனையிட்டனர். காரில் 22 கிலோ கஞ்சா, வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.அகிலன் உள்ளிட்ட மூவரும் தங்களிடமிருந்த ஆயுதத்தால் எஸ்.ஐ., குகனை தாக்கி தப்பினர். இதில் எஸ்.ஐ.,க்கு இடது கையில் வெட்டு விழுந்தது. இன்ஸ்பெக்டர் ஆடிவேல் துப்பாக்கியால் தப்ப முயன்ற அகிலனை காலில் சுட்டு பிடித்தார். மற்ற 2 பேரும் தப்பி விட்டனர். எஸ்.ஐ., குகன் மற்றும் காயமுற்ற அகிலனை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அகிலனுக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். 22 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டன.தப்பிய நிதிஷ்குமார், கண்ணனை போலீசார் தேடி வந்தனர். இருவரும் மறவமங்கலம் பகுதியில் மறைந்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அண்ணராஜா, எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சென்று அவர்களை கைது செய்ய முயன்றனர். போலீசாரை தாக்கி தப்ப முயன்ற அவர்களை விரட்டிய போது நிதிஷ்குமார் கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. கண்ணனுக்கும் உடம்பில் காயங்கள் ஏற்பட்டன. இருவரையும் போலீசார் கைது செய்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.