| ADDED : ஆக 20, 2024 07:18 AM
திருப்புத்தூர் : முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு, அதற்கான பதிவு எண் வழங்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி மாணவர், மாணவியர், மாற்றுத்திறனாளி, பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 53 வகையான போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் செப்., அக்., மாதங்களில் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க https://sdat.in/cmtrophy/player-login என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய கூறியுள்ளனர். ஆக., 4 முதல் பதிவு செய்யப்படும் வீரர்களுக்கு பதிவு செய்யப்பட்டதாக அறிவிப்பு மட்டுமே வருகிறது. ஆனால், அதற்கான ரசீது, பதிவு எண் வழங்கப்படவில்லை. இதனால், விண்ணப்பித்த மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீரர்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனர். முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுபோட்டியில் பங்கேற்க இணையதளத்தில் பதிவும் வீரர்களுக்கு பதிவு எண் வழங்க வேண்டும்.