| ADDED : ஆக 18, 2024 02:11 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், ஆவரங்காடு கச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் அகிலன், 24. இவர் மீது திருப்புவனம், பழையனுார், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, மதுரை ஒத்தக்கடை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன. நேற்று காலை 7:30 மணிக்கு மூவருடன் காளையார்கோவில் அருகே காளக்கண்மாய் பகுதியில் காரில் சென்றார். அங்கு, காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், எஸ்.ஐ., குகன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அகிலன் காரை சோதனை செய்த போது, காரில், 22 கிலோ கஞ்சா, வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. அகிலன் உள்ளிட்டோர் வைத்திருந்த ஆயுதத்தால் எஸ்.ஐ., குகனை தாக்கி தப்பினர். எஸ்.ஐ.,க்கு இடது கையில் வெட்டு விழுந்தது. தப்பி ஓடிய அகிலனை, இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தன் துப்பாக்கியால் வலது காலில் சுட்டுப் பிடித்தார். மற்ற மூவரும் தப்பினர். எஸ்.ஐ., குகன், குண்டடிபட்ட அகிலன் ஆகியோரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அகிலன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கார், 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, தலைமறைவான மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.