மாநில அளவில் வானவில் மன்ற போட்டி சிவகங்கை முதலிடம் பெற்று சாதனை
சிவகங்கை, : சென்னையில் நடந்த மாநில அளவிலான வானவில் மன்ற போட்டியில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான வானவில் மன்றத்தின் மாநில அளவிலான போட்டிகள் நடந்தது. மாவட்ட வாரியாக நடந்த போட்டியில் முதல் 4 இடங்களை பெற்ற அணிகள், மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றன. அதன்படி சென்னையில் நடந்த மாநில போட்டியில் 38 மாவட்டங்களை சேர்ந்த 152 அணிகள் பங்கேற்றன. சிவகங்கை மாவட்டம் சார்பில் கல்லல் ஒன்றியம்என்.வைரவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் ஸ்ரீஜனனி, கைலாஷ், நிரஞ்சன், முத்து பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். இவர்கள் 'சுற்றுச்சூழலை பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணிப்பு அமைப்பினை உருவாக்குதல்' என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்பித்தனர். இந்த ஆய்வு கட்டுரைக்கு அரசு சார்பில் முதல் பரிசு கிடைத்துஉள்ளது. இம்மாணவர்கள் அரசு செலவில், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல தகுதி பெற்றுள்ளனர். இதற்கான பரிசு கேடயம், சான்றுகள் அரசு சார்பில் வழங்கப்பட்டது. இம்மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர் லதா சுமதி, தலைமை ஆசிரியை ராஜலட்சுமி, வானவில் மன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் வெங்கட்ராமன் ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு பாராட்டினர்.