சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க முக்கிய சந்திப்புகளில் சி.சி.டி.வி.,கேமரா பொருத்தி போலீசார் கண்காணிக்க வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஆங்கங்கே தொடர் வழிப்பறி ,கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இவற்றை தடுப்பதற்கு போலீசாரும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் மதகுபட்டி நகைக்கடையில் கொள்ளை, காளையார்கோவில் அருகே நெடுவத்தாவு கிராமத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு, காரைக்குடியில் டூவீலரில் சென்றவர்களிடம் அலைபேசி பறிப்பு, காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.2.67 லட்சம் வழிப்பறி என பரவலாக தொடர் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. சில வழக்குகளில் தொடர்புடையவர்களை போலீசார் பிடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்புத்துார், மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம், பூவந்தி, சருகனி, தேவகோட்டை, மதகுபட்டி, ஒக்கூர், மேலப்பூங்குடி, நாட்டரசன்கோட்டை, மறவமங்கலம், புலியடிதம்பம், சிங்கம்புணரி, எஸ்.புதுார் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி., கேமரா வைத்து சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் போலீசார் கண்காணிக்க வேண்டும். அதேபோல் சிவகங்கை சுற்றுச் சாலைகளான தஞ்சாவூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்பட்டி விலக்கு சந்திப்பு, மேலுார் ரோடு, காமராஜர் காலனி சந்திப்பு, மதுரை ரோடு காளாவாசல் சந்திப்பு, சாமியார் பட்டி விலக்கு வாணியங்குடி சந்திப்பு. காளையார்கோவில் ரோட்டில் போக்குவரத்து பணிமனை பகுதி, உள்ளிட்ட பகுதிகளிலும் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டு குற்றங்களில் ஈடுபடுவர்களையும் அதிவேகமாக வாகனங்களில் செல்பவர்களையும் கண்காணிக்க வேண்டும்.போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடுவதோடு மாவட்ட எல்லைகளிலும், முக்கிய பகுதிகளிலும் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.