| ADDED : மே 09, 2024 05:25 AM
சிவகங்கை: கோடை உஷ்ணத்தை சமாளிக்க சர்பத், குளிர்பானங்களில் சேர்ப்பதற்கு எலுமிச்சை பழ தேவை அதிகரிப்பு, வரத்து குறைவால் தட்டுப்பாடு ஏற்பட்டு பழம் (எடை 55 கிராம்) ரூ.15க்கு விற்கிறது.சமையல் மற்றும் குளிர்பானங்கள், சர்பத் தயாரிக்க தேவைப்படுவது எலுமிச்சை பழம். தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அதிகளவில் விளைகிறது. கோடை என்பதால் பூக்கள் உதிர்ந்து, எலுமிச்சை விளைச்சல் இன்றி போனது. வியாபாரிகள் ஆந்திராவில் விளையும் பழங்களை வாங்கி விற்கின்றனர். ஆந்திராவில் இருந்து மதுரை மார்க்கெட்டிற்கு வரும் பழத்தை (35 கிலோ) மூடை ரூ. 4500, (50 கிலோ) மூடை ரூ.8000 விற்கிறது. மதுரையில் வாங்கி வரும் சிறுவியாபாரிகள் சந்தைகளில் வைத்து விற்கின்றனர். தற்போது கோடை கால சீசனாக இருப்பதால், குளிர்பானங்கள், சர்பத், கரும்பு ஜூஸ் போன்றவற்றிற்கு எலுமிச்சை பழ தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் விளைச்சல்இன்றி தட்டுப்பாடு காரணமாக, ஆந்திராவில் இருந்து வரும் பழத்தை வியாபாரிகள் பழம் ஒன்றுக்கு (சிறிய ரகம்) ரூ.8, பெரிய பழம் (55 கிராம்) ரூ.15க்கு விற்கின்றனர். இதனால் தற்போது நடைபெறும் காய்கறி சந்தைகளில் எலுமிச்சை பழத்திற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. மதுரைக்கே 300 மூடை தான்
வியாபாரி முருகேசன் கூறியதாவது:தமிழகத்தில் விளைச்சல்இன்றி, ஆந்திராவில்இருந்தே தினமும் மதுரைக்கு 300 மூடை (35, 50 கிலோ மூடைகள்) மட்டுமே வருகின்றன. கடும் தட்டுப்பாட்டால் அவையும் உடனே விற்று விடுகின்றன, என்றார்.