| ADDED : ஜூன் 24, 2024 11:55 PM
கீழடி : கீழடி அட்டையடி கண்மாயை தனியார் பங்களிப்புடன் துார் வாரும் பணி நேற்று தொடங்கியது. கீழடியின் கிழக்குப்பகுதியில் அட்டையடி கண்மாய் உள்ளது. 22 ஏக்கர் பரப்பளவுள்ள இக்கண்மாய் மழையை நம்பியே உள்ளது. கண்மாயை சுற்றிலும் வாழை, நெல், தென்னை விவசாயம் நடைபெறுகிறது. நான்கு வழிச்சாலைக்காக அட்டையடி கண்மாயை இரண்டாக பிரிக்கிறது. கடந்த சில வருடங்களாக கண்மாயில் தண்ணீர்தேங்காததால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது.கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன் முயற்சியால் மதுரை மேற்கு ரோட்டரிசங்கத்தின் வைர விழாவை முன்னிட்டு 15 லட்ச ரூபாய் செலவில் அட்டையடி கண்மாயை தூர் வார முடிவு செய்யப்பட்டு நேற்று அதற்கான விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன் தலைமை வகித்தார். கீழடி வி.ஏ,ஓ., பிரபு, ரோட்டரி சங்க தலைவர் தனராஜன், செயலாளர் சுமதி ஞானகுகன், இயக்குனர்கள் மைதிலி, பொன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கண்மாயை துார் வாரும் போது உதிரியாக கிடைக்கும் மண்ணை வைத்து கீழடி அருங்காட்சியகத்தில்பள்ளமும் மேடுமாக உள்ள வாகனங்கள் நிறுத்துமிடம் சரி செய்யப்பட உள்ளது.