உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பேரூராட்சியாக தரம் உயரும் 6 ஊராட்சி இளையான்குடிக்கு நகராட்சி அந்தஸ்து 

பேரூராட்சியாக தரம் உயரும் 6 ஊராட்சி இளையான்குடிக்கு நகராட்சி அந்தஸ்து 

சிவகங்கை: மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி உட்பட 6 ஊராட்சிகளை பேரூராட்சியாகவும், இளையான்குடி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.மாவட்ட அளவில் ஆன்மிக சுற்றுலா தலமாக காளையார்கோவில், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, பிரான்மலை, தொல்லியல் சுற்றுலா தலமாக கீழடி, மதகுபட்டி ஆகிய 6 ஊராட்சிகள் செயல்படுகின்றன. இந்த ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.பேரூராட்சியாக தரம் உயர்த்த குறிப்பிட்ட அளவு மக்கள் தொகை,ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். அரசு நிர்ணயித்த மக்கள் தொகை, வருவாயை விட கூடுதலாகவே இருப்பதால், இந்த 6 ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்தலாம் என அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கருத்துரு அனுப்பியுள்ளனர். அதே போன்று பல ஆண்டாக இளையான்குடி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த மக்கள் தொகை 20 ஆயிரத்திற்கு மேல் இருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.50 லட்சத்திற்கு மேல் இருப்பது அவசியம். இளையான்குடியை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. எனவே இந்த பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவும் கருத்துரு அனுப்பியுள்ளனர்.பேரூராட்சிகளின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆன்மிக சுற்றுலா தலம், தொல்லியல் தலமாக இருப்பதால் 6 கிராம ஊராட்சிகளையும் பேரூராட்சியாகவும், இளையான்குடியை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பினை அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். இதற்கான கருத்துருக்களை ஏற்கனவே அனுப்பிவிட்டோம். நேற்று அரசு செயலர் நடத்திய வீடியோ கான்பிரன்சிங் கூட்டத்திலும், இது குறித்து வலியுறுத்தியுள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை