உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குற்றங்களை தடுக்க தனி போலீஸ் ஸ்டேஷன் தேவை

குற்றங்களை தடுக்க தனி போலீஸ் ஸ்டேஷன் தேவை

காரைக்குடி : காரைக்குடி புறநகர் பகுதியான சூரக்குடி சாலை, சங்கராபுரம் பகுதியில் அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களை தடுக்க தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. காரைக்குடி அருகே வளர்ந்து வரும் முக்கிய பகுதியாக சங்கராபுரம் ஊராட்சி சூரக்குடி பகுதி உள்ளது. காரைக்குடியில் உருவாகியுள்ள இட நெருக்கடி காரணமாக தீயணைப்பு நிலையம், ஒருங்கிணைந்த பத்திர பதிவாளர் அலுவலகம், மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதிநேர அலுவலகம் உட்பட பல திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை அருகே செயல்பட தொடங்கியுள்ளது. சட்டக்கல்லுாரி, மினி டைட்டல் பார்க் உள்ளிட்டவையும் தொடங்கப்பட உள்ளது. தவிர அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையும் இப்பகுதியில் செயல்படுகிறது.நாளுக்கு நாள் புதிய குடியிருப்பும் அதிகரித்து வருகிறது. காரைக்குடி காவல் உட்கோட்டத்தில் காரைக்குடி வடக்கு, தெற்கு, அனைத்து மகளிர், அழகப்பாபுரம், குன்றக்குடி, பள்ளத்துார், செட்டிநாடு, சாக்கோட்டை, சோமநாதபுரம் மற்றும் குற்றப்பிரிவு என 10 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன. ஆனால் சூரக்குடி சாலையில் அமைந்துள்ள ஹவுசிங் போர்டு, என்.ஜி.ஓ., காலனி, போக்குவரத்து நகர் பகுதிகளும், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளும் குன்றக்குடி போலீஸ் ஸ்டேஷன் எல்கைக்குட்பட்டவையாகும்.விபத்துக்களோ வேறு ஏதும் சட்டப் பிரச்னை ஏற்பட்டாலோ தகவல் அறிந்து 15 கி.மீ., துாரத்தில் இருந்து போலீசார் வருவதற்கு தாமதமாகிறது. இதனால், பிரச்னைகள் பெரிதாவதோடு விபத்தில் சிக்கியவர்களை மீட்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பல்வேறு உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகிறது. இதனை தடுக்க, வளர்ந்து வரும் பகுதியான சூரக்குடி சாலை, திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை பகுதியில் தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமூக ஆர்வலர் குமார் கூறுகையில்: காரைக்குடியில் செயல்பட்ட அரசு அலுவலகங்கள் பலவும் இட நெருக்கடி காரணமாக திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலைக்கு மாற்றப்பட்டு வருகிறது. தவிர, முக்கிய பகுதியாக கழனிவாசல் என்.ஜி.ஓ., காலனி, டிரைவர் காலனி, போக்குவரத்து நகர் ஹவுசிங் போர்டு உட்பட பல பகுதிகளும் உள்ளது.தற்போது காரைக்குடி நகராட்சியுடன் சங்கராபுரம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டி பாதுகாப்பற்ற இடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்களும், திருட்டு சம்பவங்களும் அதிக அளவில் நடந்து வருகிறது. போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், குன்றக்குடியில் இருந்து போலீசார் வருவதற்குள் சம்பவங்கள் நடந்து முடிந்து விடுகிறது. பொதுமக்கள் நலனை கருதி இப்பகுதியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை