இளையான்குடியில் குவிந்துள்ள குப்பை விவசாயம் செய்ய முடியாமல் அவதி
இளையான்குடி : இளையான்குடியில் தனியாருக்கு சொந்தமான இடத்திலும் குப்பையை கொட்டுவதால் அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் தினந்தோறும் சேகரமாகும் குப்பை தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது குப்பைக்கிடங்கு நிரம்பி வழிவதை தொடர்ந்து மயானம் அருகிலும்,அங்கிருந்து பைபாஸ் ரோடு செல்லும் ஓரங்களிலும் ஆங்காங்கே குப்பையை கொட்டி வைக்கின்றனர்.இவ்வழியாக தாலுகா அலுவலகம்,கோர்ட்,சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் துர்நாற்றத்தால் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் குப்பை கிடங்கு அருகே தனியாருக்கு சொந்தமான இடங்களிலும் குப்பையை கொட்டி குவித்து வைத்திருப்பதால் அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.தனியார் நில உரிமையாளர்கள் கூறியதாவது: பல இடங்களில் குப்பைகளை கொட்டி வருவது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாய நிலங்களில் குப்பைகளை கொட்டுவதால் நீண்ட வருடங்களாக விவசாயம் செய்ய முடியாமல் போகிறது.செயல் அலுவலர் பணியிடமும் நீண்ட காலமாக காலியாக இருப்பதினால் எவ்வித பணிகளும் முறையாக நடைபெறாமல் உள்ளது.மேலும் இரவு நேரங்களில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் எழும் புகை மூட்டத்தால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. ஆகவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.