திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் நாட்டு காய்கறிகள் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திருப்புவனம் அருகே வெள்ளிகுறிச்சி, சொக்கநாதிருப்பு, அல்லிநகரம், மாரமாடு,ஆவரங்காடு, பூவந்தி பகுதிகளில் கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய் உள்ளிட்ட நாட்டு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறைந்த செலவு, நோய் தாக்குதல் குறைவு, தினசரி வருவாய், தண்ணீர் தேவையும் குறைவு என்பதால் விவசாயிகள் நெல் அறுவடை முடிந்த பின் நாட்டு காய்கறி சாகுபடியில் ஈடுபடுவார்கள். கடந்த சில ஆண்டாக போதிய விலை கிடைக்காததால் நாட்டு காய்கறி சாகுபடி பெருமளவு குறைந்து விட்டது. ஒரு சில விவசாயிகள் மட்டுமே காய்கறி சாகுபடி செய்து விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். சாகுபடியை அதிகரிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டினாலும் விதைகள், உரங்கள் மானிய விலையில் கிடைக்காததால் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். அல்லிநகரம், பழையனூர் பகுதியில் தக்காளிகள் குறைந்த அளவில் பயிரிடப்பட்டன. நாட்டு காய்கறிகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் தேவை, தினசரி அறுவடை செய்து லாபம் ஈட்டலாம் என்பதால் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக நாட்டு காய்கறிகள் பயிரிடுவது வழக்கம். மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் காய்கறி மார்கெட்டில் திருப்புவனம் பகுதி காய்கறிகளான கத்தரிக்காய், பாகற்காய்க்கு நல்ல மவுசு உண்டு. அதிலும் சொக்கநாதிருப்பு கத்தரிக்காயை பொதுமக்கள் விரும்பி வாங்குவார்கள். ஆனால் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், மான்யங்கள் ஏதும் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் நாட்டு காய்கறிகளை பயிரிடுவதை விட்டு விட்டனர். திருப்புவனம், திருப்பாச்சேத்தி சந்தைகளில் வாரம்தோறும் விவசாயிகளுக்கு தேவையான கத்தரி, வெண்டை, தக்காளி செடிகள் விற்பனை செய்யப்படும். பழையனூர் பகுதியில் நாற்றங்கால் அமைத்து விவசாயிகள் மொத்தமாக கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, நாட்டு காய்கறிகளான கத்தரி, வெண்டை, வெங்காயம், கொத்தவரங்காய் உள்ளிட்டவற்றை வற்றலாக்கி ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம். இது குறித்து விழிப்புணர்வு இல்லாததால் நாட்டு காய்கறிகள் விற்பனை சரிந்து விட்டது. விவசாயிகளான நாங்களும் மாற்று விவசாயத்திற்கு மாறிவிட்டோம் என்றனர்.