உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கடும் பனிப்பொழிவால் வாழை விவசாயம் பாதிப்பு

 கடும் பனிப்பொழிவால் வாழை விவசாயம் பாதிப்பு

திருப்பாச்சேத்தி: கடும் பனிப்பொழிவால் திருப்புவனம் பகுதியில் வாழை இலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். திருப்பாச்சேத்தி, கானூர், கல்லூரணி, மாரநாடு, பச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் நாட்டு வாழை, ஒட்டு வாழை, ரஸ்தாளி, பூவன் உள்ளிட்ட வாழை ரகங்கள் 449 எக்டேரில் பயிரிடப்படுகிறது. ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் வீதம் நடவு செய்து 10 மாதங்கள் வரை பராமரிக்கின்றனர். அதன்பின் வாழை காய்கள் வெட்டப்பட்ட பின் பக்க கன்றுகள் மூலம் வாழை இலை அறுவடை செய்யப்படுகிறது. பெரும்பாலும் விவசாயிகள் முகூர்த்த நாட்களை கணக்கிட்டு வாழை பயிரிடுகின்றனர். அப்போதுதான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும், வாழை விவசாயத்தை பொறுத்தவரை தண்ணீர் எவ்வளவுக்கு எவ்வளவு தேவையோ அதே அளவு வெயிலும் தேவை, அப்போதுதான் இலைகள் விளைச்சல் அதிகமாக இருக்கும். எனவே வாரத்திற்கு ஒரு முறைதான் தண்ணீர் பாய்ச்சுவார்கள். திருப்பாச்சேத்தி வாழை இலைகள் ஒரு வாரம் வரை வாடாது, பச்சை நிறமும் மாறாது, மற்ற பகுதி வாழை இலைகள் மூன்றே நாட்களில் வாடி விடும். வாழை இலை அறுவடை சுழற்சி முறையில் நடைபெறும். ஏக்கருக்கு ஆயிரம் இலைகள் முதல் இரண்டாயிரம் இலைகள் வரை கிடைக்கும், திருப்பாச்சேத்தி பகுதியில் விளையும் வாழை இலைகள், காய்கள், பழங்கள், மரங்கள் உள்ளிட்டவைகள் திருப்பாச்சேத்தி வாழை மார்கெட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன. மதுரை , பரமக்குடி பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாழை இலைகள் வாங்கிச் செல்வார்கள். ஏக்கருக்கு 200 இலைகள் கொண்ட ஐந்து கட்டுகள் கிடைத்த நிலையில் தற்போது இரண்டு கட்டுகள் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக் கின்றனர். கடும் பனிப் பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயி நாகசுந்தரம் கூறியதாவது, கடும் பனிப்பொழிவு மற்றும் கண்மாய்களில் போதியநீர் உள்ளது. வைகை ஆற்றிலும் தண்ணீர் செல்வதால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. காலை 8:00 மணி வரை பனிப் பொழிவு இருப்பதால் வாழை இலைகள் விளைச்சல் குறைந்துள்ளது. ஐந்து கட்டுகள் அறுவடை செய்த இடத்தில் தற்போது ஒரு கட்டு இலையே கிடைக்கிறது. விலை கிடைக்கும் நேரத்தில் விளைச்சல் இல்லை. விளைச்சல் இருந்தால் விலை கிடைக்காது. நவ., வரை ஒரு கட்டு இலை ரூ.500 முதல் 700 வரை விற்கப்பட்டது. தற்போது ரூ.1,500 வரைவிற்கிறது. விலை கிடைத்தாலும் விளைச்சலின்றி விவசாயிகளுக்கு இந்த விலை உயர்வால் எந்த லாபமும் இல்லை. திருப்பாச்சேத்தி வாழை வியாபாரி கோபால்செல்வம் கூறியதாவது, நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 வாழை இலை கட்டுகள் விற்பனைக்கு வந்தன. தற்போது 30 முதல் 40 கட்டுகள் வரையே வருகின்றன. இதனால் விலை உயர்ந்துள்ளது 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு கடந்த இரண்டு வாரம் முன் ரூ.800க்கு விற்றது. தற்போது ரூ.1,500 என விற்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை