போலி ஆதார் அட்டை மூலம் பல கோடி நிலம் பத்திரப்பதிவு: மாஜி எம்.எல்.ஏ., மீது புகார்
காரைக்குடி:காரைக்குடியில் போலி ஆதார் அட்டை மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முன்னாள் காங்., எம்.எல்.ஏ., சுந்தரம்70, அவரது மகன் பெயருக்கு மாற்றியதாக தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் தென்மண்டல ஐ.ஜி.,யிடம் புகார் அளித்துள்ளார்.சொக்கலிங்கம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அழகாபுரியில் ரூ.பல கோடி மதிப்புள்ள 47 சென்ட் இடம் கல்லங்குடி நாராயணன் மகன் சுந்தரம் என்பவரது பெயரில் உள்ளது. இந்த நிலத்தை முன்னாள் காங்., எம்.எல்.ஏ., சுந்தரம் தன்னை நாராயணன் மகன் சுந்தரம் என போலியாக ஆதார் அட்டை தயார் செய்து காரைக்குடி பத்திரபதிவு அலுவலகத்தில் ஜூன் 23ம் தேதி தனது மகன் கார்த்திக் என்ற பெயருக்கு தான செட்டில்மென்ட் பத்திரம் பதிந்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ., போலி ஆதார் தருகிறார் என தெரிந்தும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளனர். இதற்கு முத்து, கண்ணன் ஆகிய இருவரும் சாட்சி கையெழுத்து போட்டுள்ளனர்.இதுகுறித்த தகவல் பரவியதால் பதிவு செய்யப்பட்ட செட்டில்மெண்ட் பத்திரத்தை நவ., 29ல் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் ரத்து செய்துள்ளார். ரத்து செய்யும்போது அதே ஆதார் அட்டை எண்ணில் நடேசன் மகன் சுந்தரம் என்று கொடுத்துள்ளார். இதுபோன்று, பத்திரப்பதிவு அதிகாரிகள் முக்கிய நபர் என்று தெரிந்தும் ஆதார் மோசடி மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளனர். எனவே போலி ஆதார் அட்டை மூலம் பத்திரப்பதிவு மேற்கொண்ட சுந்தரம், மகன் கார்த்தி, சாட்சி கையொப்பமிட்டவர்கள், பதிவாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுந்தரம் 1996 - 2001, 2006 - 2011 என இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்.போலி ஆதாரில் நில பதிவு குறித்து அவரிடம் விளக்கம் பெற, அவரது அலைபேசியை தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை.