நெற்களம் இல்லாமல் விவசாயிகள் தவிப்பு
திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியம் கருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணிப்பட்டியில் 100 குடும்பங்கள் வரை வசிக்கின்றனர். விவசாயிகள் நிறைந்த இக்கிராமத்தில் இங்குள்ள கதிர் அடிக்கும் நெற்களம் சில ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்ததால் புதிய களம் கட்ட கோரினர். இதனையடுத்து ரூ. 8.8 லட்சத்தில் புதிதாக நெற்களம் கட்டினர். ஆனால் கட்டி முடித்த சில நாட்களிலேயே தரைத்தளம் வெடித்து சேதமானது. இதனால் விவசாயிகள் இக் களத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை வைத்தும், நடவடிக்கை இல்லை. இதனால் பழைய களத்தையே கிராம செலவில் மீண்டும் சீரமைத்து பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் செலவாகியும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை. மேலும், இங்குள்ள குடிநீர் ஊருணி பராமரிக்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன. மேல்நிலைத்தொட்டி நீரை புழக்கத்திற்கு பயன்படுத்தும் இக்கிராமத்தினர் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் இந்த ஊருணியையே நம்பியே உள்ளனர். இதனால் ஊருணியை தூர்வாரி சுற்றிலும் தூண்கள் அமைத்து பாதுகாப்பாக கம்பிவலையுள்ள வேலி அமைக்கவும நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இந்த ஊருணிக்கு கிராம பொதுநிலத்திலிருந்தும், அய்யன் கண்மாயிலிருந்தும் மழை நீர் வரத்து உண்டு. கண்மாயிலிருந்து வரும் வரத்துக்கால்வாய் பல ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதால் கண்மாய் நீர் வராமல் ஊருணி பெருகுவதில்லை. எனவே இந்த ஊருணியை துார்வாரி நீராதாரத்தை காக்க வேண்டும். இது குறித்து சிந்தாமணிபட்டி பாலா கூறியதாவது, இக்கிராமத்தில் உள்ள வீடுகள் தவிர்த்து, ரோட்டின் இருபுறமும் புதிய குடியிருப்புகள் உருவாகி உள்ளன. ரோடு மேடாக உள்ளதால் மழை பெய்யும் போது மழைநீர் வடிந்து குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. எனவே ரோட்டின் ஓரத்தில் மழை நீர் கால்வாய் கட்ட வேண்டும். ஊருணியை துார்வாரி, சுற்றுச்சுவர் கட்டி பாதுகாக்க வேண்டும். ஊருணியில் உள்ள மின்கம்பம் சரிந்து விடுகின்றன. இவற்றை சீர்படுத்த வேண்டும் என்றார். திருக்கோஷ்டியூர், ஆக.13-- திருப்புத்துார் அருகே சிந்தாமணிபட்டி கிராமத்தில் சேதமான நெற்களங்களை சீரமைக்கவும், குடிநீர் ஊருணியை துார்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.